‘பாஜகவினர் அமைச்சர் ஆவார்கள்’ நாகேந்திரன் பேச்சால் அதிமுக அதிர்ச்சி
சென்னை, பிப். 26- சென்னையில் பாஜக தேர்தல் பணிமனை திறக்கும் நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் பாஜக-விலிருந்து 20 முதல் 30 பேர் எம்எல்ஏ-க்களாகவும், சிலர் அமைச்சர்களாகவும் வருவார்கள் என்று கூறினார். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திரும்பத் திரும்பக் கூறி வரும் நிலையில், கூட்டணியிலுள்ள பாஜக-வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு, அதிமுக-வினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதனிடையே, பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிறகே தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், கூட்டணி ஆட்சி என்பதில் தாங்கள் பிடிவாதம் காட்டவில்லை எனவும் நயினார் சமாளித்துள்ளார்.
தனித்தேர்வர் செய்முறைத் தேர்வுகள் தொடங்கின!
சென்னை, பிப். 26 - பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ளது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23 முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வியாழக்கிழமை துவங்கியது. இத்தேர்வு பிப்ரவரி 28 வரை நடைபெறவுள்ளது. தனித் தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்களை மார்ச் 2-க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் க.சசிகலா அறிவுறுத்தியுள்ளார்.
வினாத்தாளில் பிழையிருந்தால் மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்!
சென்னை, பிப். 26 - பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கேள்வித்தாள் தொடர்பான புகார்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மார்ச் 2 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறவுள்ள பொதுத்தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடிகள் அல்லது பாடத்திட்டத்திற்கு வெளியே கேள்விகள் இடம்பெற்றிருந்தால், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் dgequestionpaper queries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகாரை அனுப்பலாம். புகார் தெரிவிக்கும்போது கேள்வி எண் மற்றும் என்ன தவறு உள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். மின்னஞ்சல் புகாரை தேர்வு நடைபெற்ற தினமே அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் தவிர வேறு வழியில் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் சசிகலா அறிவுறுத்தியுள்ளார்.
விவாதங்களில் பங்கேற்க வேண்டாம்: கட்சியினருக்கு விஜய் தடை!
சென்னை, பிப். 26 - தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டு இருக்கும் அறிக்கை ஒன்றில், “தலைமைக் கழகத்தின் முறையான அனுமதியின்றி கட்சி நிர்வாகிகளோ தொண்டர்களோ எவ்விதமான ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார். “தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் உட்பட சமூக ஊடகத் தளங்களுக்கு நேர்காணல் வழங்குவதற்கும் தலைமையின் அனுமதி கட்டாயம்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், “மாநில அளவிலான ஊட கங்கள் மட்டுமன்றி தேசிய அளவிலான ஊடகங்களிலும் அனுமதியின்றி பங்கேற்பதோ நேர்காணல் அளிப்பதோ கூடாது” என்றும் ஆனந்த் கூறியுள்ளார்.
தோழர் நல்லகண்ணு மறைவுக்கு ப.சிதம்பரம் அஞ்சலி
சென்னை, பிப். 26- இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்ல கண்ணுவின் மறை வுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரு மான ப. சிதம்பரம் அஞ்சலி செலுத்தினார். அத்துடன் “தோழர் நல்லகண்ணுவின் மறைவு அனைவரை யும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், அரசியல் நாக ரிகம், அப்பழுக்கற்ற ஒழுக்கம், சித்தாந்தப் பற்று, சலியாத உழை ப்பு மற்றும் காந்திய எளிமை ஆகியவற்றின் சின்னமாக நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து தோழர் நல்ல கண்ணு சரித்திரம் படை த்தார்” என்று தமது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்திலும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி
சென்னை, பிப். 26 - தமிழ்நாடு சாம்பி யன்ஸ் அறக்கட்டளை மூலம் சர்வதேச விளை யாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர் களுக்கு நவீன உபகர ணங்கள் மற்றும் நிதி யுதவி வழங்கப்படுவ தாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ஜூடோ வீரர்கள் ஆகாஷ்ராஜ் மற்றும் ஈஸ்வர்மூர்த்தி ஆகியோருக்கு தலா ரூ. 45,000 மதிப்பிலான உபகரணம், பாரா கிரிக்கெட் வீரர் சண்முகத்துக்கு ரூ. 1.28 லட்சம் மதிப்பிலான உபகரணம், வாள்வீச்சு வீராங்கனை தர்ஷினி மற்றும் நீச்சல் வீராங்கனை ஹர்ஷா ஆகியோருக்கு தலா ரூ. 1 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள், மலே சியாவில் நடைபெறும் சிலம்பம் போட்டிக்காக வீரர் ஹரிஹரனுக்கு ரூ.75,000-க்கான காசோ லை என மொத்தம் ரூ. 4.93 லட்சம் மதிப்பி லான உதவிகள் வழங் கப்பட்டன.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5,000 ஊதிய உயர்வு : அமைச்சர்
சென்னை, பிப். 26- தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ. 5,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று உயர்கல்விதுறை அமைச்சர் கோவி.செழியன் வியாழக்கிழமை அறிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடை மருதூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது: “கவுரவ விரிவுரையாளர்களுக்கு 2016-இல் இருந்து உயர்த்தப்படாமல் இருந்த ஊதியம் 2022-இல் ரூ. 15,000-லிருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. பின்னர், மீண்டும் 2 ஆண்டுகளிலேயே (2024-ல்) ரூ. 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் ரூ. 25,000-லிருந்து ரூ.30,000-ஆக உயர்த்திட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, கவுரவ விரிவுரையாளர்கள் 2026 மார்ச் 1 ஆம் தேதி முதல் மாதம் ரூ. 30,000 ஊதியம் பெற லாம். அதேபோல் அரசு பாலிடெக்னிக் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு ரூ. 20,000-லிருந்து ரூ. 25,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு, ஆண்டிற்கு ரூ. 53 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் 8,741 பேர், அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக உதவி பேராசிரியர்கள் 319 பேர் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் 586 பேர் ஆக மொத்தம் 9,646 தற்காலிக ஆசிரியர்கள் இதன் மூலம் பயனடைவர்.’’ இவ்வாறு அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார். திருவிடைமருதூர் பகுதியில் தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு “முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவிடைமருதூர்’’ என பெயர் சூட்டப்படும் எனவும் கோவி. செழியன் அறிவித்தார்.
மாநிலங்களவைத் தேர்தல் : வேட்புமனுத் தாக்கல் துவங்கியது!
சென்னை, பிப். 26- தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை தொடங்கியது. மு. தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, அந்தியூர் பி. செல்வராசு ஆகிய 6 பேரின் மாநிலங்களவை பதவிக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 6 இடங்கள் உட்பட நாடு முழுவதும் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேட்புமனுத் தாக்கல் வியாழக்கிழமை (பிப். 26) துவங்கியது. முதல் நாளில் அரசியல் கட்சி சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் சென்னை தலைமை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் 252-ஆவது முறையாக வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு மார்ச் 5 கடைசி நாளாகும். திரும்பப் பெறுவதற்கு மார்ச் 9 கடைசி நாளாகும். தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படலாம்.