tamilnadu

மோடி உரையாற்றுவார் என்றதுமே வெளியேறிய இஸ்ரேல் எம்.பி.க்கள்!

மோடி உரையாற்றுவார் என்றதுமே வெளியேறிய இஸ்ரேல் எம்.பி.க்கள்!

டெல் அவிவ், பிப். 26 - இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டிற்குச் சென்றார். புதனன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றினார். ஆனால் மோடி உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்ட உடனேயே, இஸ்ரேல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதுதொடர்பான வீடியோ உலகளவில் வைரலாகி வருகிறது.  வீடியோவில், மோடி பெயரை இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகர் அமீர் ஓஹானா அறிவித்த, அடுத்த சில நொடிகளிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் யாயர் லேபிட் தலைமையிலான எம்.பி.,க்கள் நாடாளுமன்ற அவையை விட்டு வெளியேறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது பிரதமர் மோடிக்கான எதிர்ப்பு என்று செய்திகள் வெளியான நிலையில், இஸ்ரேல் உச்ச நீதிமன்ற நீதிபதி ஐசக் அமித் என்பவரை, முறைப்படி இந்த நிகழ்விற்கு நாடாளுமன்ற சபாநாயகர் அமீர் ஓஹானா அழைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அழைக்கவில்லை. இதைக் கண்டித்தே எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன. “பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் சபாநாயகர் ஆகியோரின் செயல்பாடுகளைக் கண்டித்தே எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளியேறினர்; இந்திய பிரதமர் மோடியின் உரையைத் தவிர்க்கவில்லை. நேதன்யாகு மற்றும் சபாநாயகர் பேசும்போது மட்டும் வெளியே இருந்த அவர்கள், பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்குவதற்கு முன்பாக மீண்டும் அவைக்குத் திரும்பினர்” என இஸ்ரேல் ஊடகமான, ‘டைம்ஸ் ஆப் இஸ்ரேல்’ விளக்கம் அளித்துள்ளது.