கெட்ட நான்கு வர்ணம்
உலகில் வானம் ஒற்றை நீல வர்ணம் இந்திய வானம் கெட்ட நான்கு வர்ணம்! எங்கும் வானவில் ஏழு சோதி வர்ணம் இந்திய வானவில் ஆயிரம் சாதி வர்ணம்!
(உலகில்)
வண்ணம் என்ற பெயரில் -இது வஞ்சம் வஞ்சம்! கண்ணி வலைக்கு வண்ணம் தீட்டினால் கருணை வலை ஆகுமோ? எண்ணம் புதுமை ஏது -நம் இந்திய நெஞ்சம் ? பின்னடி வைத்துப் போகிறதே என்று சாதிச்சதி வீழுமோ? மனுநீதியினை மனித நீதியென் றேபொருள் கொள்ளுவதோ ? நாகப் பாம்பை நல்ல பாம்பெனில் அமுதம் கக்கிடுமோ ?
(உலகில்)
கன்னம் வைக்கும் கள்வன் -அவன் இதயம் கருப்பு வெள்ளைச் சட்டை அணிந்தால் அவன் மனம் வெள்ளையாகி விடுமோ ? இனிய அழகுப் பெயரில் -இங்கு சாதியின் இருப்பு சாதி மனிதனை நீதி மனிதனாய் பெயர்கள் மாற்றி விடுமோ ? ஓவியன் தூரிகை வண்ணம் கலப்பதால் சித்திரம் வெளிப்படுமே. உண்மையில் நான்கு வர்ணம் கலப்பதால் இந்தியா எழில் படமே !
(உலகில்)
இரும்புச் சுவரை தாண்ட -இங்கே ஏணி உண்டு! இதயச் சுவரைத் தாண்டுவ திங்கே எந்த ஏணி கொண்டு ? வர்ண தருமம் என்று -பார் வைத்தார் பேரு! அதர்மத்துக்கு தர்மம் என்று பேர் வைத்தது எவ்வாறு? எந்த வர்ணமும் அழகு வர்ணமே இயற்கை படைத்ததடா! இந்திய வர்ணமோ சாதிய வர்ணம் சதியில் பிறந்ததடா!
(உலகில்)
