articles

img

ஜியோனிசத்தை வேரறுக்கும் குரல்....” - கி.ஜெயபாலன்

ஜியோனிசத்தை வேரறுக்கும் குரல்....” 

கலை, இலக்கியம், அறிவியல் என்ற அனைத்து அம்சங்களின் சங்கமமே சினிமா. இது பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் பிரமிப்பானது மற்றும் வலிமையானது. இந்த மாயக் கலைவடிவம் பற்றி உலகப் புகழ்பெற்ற போலந்து இயக்குநர் ஆந்த்ரேஜ் வாய்த்டா,”சினிமா என்பது யதார்த்தத்தின் வெறும் சித்தரிப்பு அல்ல;மாறாக அதை ஊடுருவி பார்ப்பதற்கான வாயில்” எனக் குறிப்பிட்டார்.

அண்மையில் வெளிவந்துள்ள “தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்” என்ற பாலஸ்தீன திரைப்படம் இதற்கு மிகச்  சரியான எடுத்துக்காட்டாக அமைந்துள் ளது. 2023 அக்டோபர் 7,இஸ்ரேல் பாலஸ்தீ னர்களை இனப் படுகொலை செய்ய ஆரம்பித்த நாள். சர்வதேச போர் விதி முறைகளை அப்பட்டமாக மீறத் துவங்  கிய நாளும் கூட. இவர்களது கொடுந் தாக்குதலில் 72000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகளில், பள்ளிகளில், ரெட்கிரசண்ட் சங்கங்கள் போன்ற மீட்பு மையங்களில் டிரோன்களால் நடத் தப்பட்ட படுகொலைகளுக்கு எல்லையே இல்லை. இரண்டு இலட்சத்திற்கும் மேலானோர் படுகாயம் அடைந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து இடிபாடுகளுடன் இன்றும் அகதிகளாக வாழ்கின்றனர். மருத்துவமனைகள், பள்ளிகள் சேதமடைந்து இன்றளவும் இயங்காத நிலை. இறந்தவர்களில் முப்பது சதவீதத்திற்கும் மேல் பச்சி ளங்குழந்தைகள். பட்டினிச் சாவுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இஸ்ரேலின் இந்த இனப் படுகொலையை, மனசாட்சி  அற்ற இன்றைய உலக நாடுகள் பல மௌனமாக வேடிக்கை பார்த்தன. கண்முன்னே நடந்த கொடூரங்களை கண்டும் காணாமலே கடந்து சென்றன பல நாடுகள். இக்கொடூரங்களைத் தடுக்காமல் அதற்கு உதவிக்கரம் நீட்டிய  நாடுகளில் இந்தியாவும் ஒன்று. படு கொலையை வேடிக்கை பார்த்தவன், உற வினரிடம் துக்கம் கேட்டது போல் இருந்தது இந்நடவடிக்கை.  இப்படியான புவிசார் அரசியலின் பின்னணியில், பாலஸ்தீனத்தின் காசாவை, 2024 ஜனவரி 29 அன்று, இஸ்ரேல் படைகள் வழக்கம்போல் திடீர்  தாக்குதல் நடத்துகிறது. ஐந்து வயது  பாலஸ்தீன குழந்தையான ஹிந்த்  குடும்பத்தின் கார் மீதும் குண்டுவீச்சு  நடக்கிறது. ஹிந்த் கண்முன்னே அவ ளது உறவினர்கள் நால்வர் கொல்லப்படு கின்றனர். ஹிந்தின் மற்றொரு உறவின ரான பதினான்கு வயதான பெண், காரின்  இடிபாடுகளோடும் இறந்த சடலங்க ளோடும், கையில் கிடைத்த செல்போன்  துணையோடு, பாலஸ்தீன் ரெட் கிரசன்ட்  மீட்பு மையத்தை தொடர்பு கொள்கிறாள். சிறிது நேரத்தில் அவளும் துப்பாக்கி குண்டுக்கு பலியாகிறாள். இப்போது ஐந்து சடலங்களோடு ஹிந்த் மட்டும் காருக்குள் மிஞ்சுகிறாள். பயம் மற்றும் குழப்பம் மிகுந்த ஹிந்த் தற்போது ரெட் கிரசன்ட் மையத்தோடு தொடர்பு கொள்கிறாள். “ரெட் கிரசன்ட் ஊழியர் ஓமர்: வணக்கம்! ரெட் கிரசண்ட் அவசர சிகிச்சை  பிரிவு,ரமல்லா. நான் ஓமர் பேசுகிறேன், நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்? ஹிந்த்: எனக்கு பயமாக இருக்கிறது. அவர்கள் சுடுகிறார்கள். வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள். ஓமர்: உங்கள் பெயர் என்ன? ஹிந்த்: ஹிந்த் ரஜப் ஹமாடா. தயவுசெய்து என்னை விட்டு விடாதீர்கள். நான் தனியாக இருக்கிறேன். டாங்கி கள் இங்கே வந்துவிட்டன. அவர்கள் என்னை நோக்கி சுடுகிறார்கள்.தயவு செய்து வாருங்கள்.என்னைக் காப்பாற்றுங்கள். ஹிந்த்தின் பயத்தை போக்க, கவ னத்தை திசை திருப்ப பேச்சு தொடுக்கி றார் ஓமர்: நீ மழலையர் பள்ளியில் படிக்கிறாயா? ஹிந்த்: நான் பட்டாம்பூச்சி வகுப்பில் படிக்கிறேன். ஓமர்: நாங்கள் உன்னை அழைத்துச் செல்ல வருகிறோம். ஹிந்த்: தயவுசெய்து என்னை விட்டுவிடாதீர்கள்.எனக்கு இருட்டைக் கண்டால் பயம். ரெட் கிரசன்ட் பெண் ஊழியர்: இன்  னும் கொஞ்சம் வெளிச்சம் இருக்கிறது. நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது.” இந்த உரையாடல்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய ஓமர் உள்ளிட்ட ஊழியர்கள் போராடுகிறார்கள். அதற்கும்  இஸ்ரேல் நிர்வாகமே அனுமதிக்க வேண்  டும். ஏற்கெனவே, பல மீட்பு வாக னங்களையும், தன்னார்வலர்களையும் சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம், மீட்பு வாகனம் பயணிக்க பச்சை விளக்கு  சிக்னலும் காட்டுகிறது. அழிக்கப்பட்ட காசா நகரத்தின் வரைபடங்களில் மீட்பு வாகனம் சாலைகளற்ற, நொறுங்கிய கட்டிட இடிபாடுகளுக்கிடையே எட்டு நிமி டம் பயணித்தால் ஹிந்த் உள்ள இடத்தை  அடைந்து, அவள் காப்பற்றப்படலாம். அதுவரை ஹிந்த் மற்றும் மீட்பு வாகன  தன்னார்வலர்கள், இஸ்ரேலால் கொல்லப்படாமல் இருக்க வேண்டும். மீட்பு வாகனம் இரு தன்னார்வ ஊழி யர்களோடு ஹிந்தை மீட்கப் புறப்படு கிறது. ஒட்டுமொத்த ரெட் கிரசன்ட் மீட்பு  மைய ஊழியர்கள், மீட்பு வாகனம் செல்லும் வரை படத்தை திகைத்து போய் திரையில் பார்த்துக் கொண்டிருக்கி றார்கள்.... “ஹிந்தின் குரல் மீட்கப்பட்டதா?.....” இல்லை. ஹிந்த் மற்றும் மீட்பு வாகன தன்னார்வலர்கள் எல்லோரும் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்படுகிறார்கள். குண்டுகளால் துளைக்கப்பட்ட ஹிந்த்தின் காரும், மீட்பு வாகனமும் அருகருகே கிடக்கின்ற உண்மையான புகைப்படத்தை மட்டும் காண்பித்து படம் முடிகிறது.  இத்திரைப்படம் உண்மைச் சம்ப வத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள் ளது. மீட்பு மையம், அதன் ஊழியர்களின் போராட்டம் என்ற கற்பனையோடு, ஹிந்தின் உண்மையான தொலைபேசி  உரையாடல்கள் இணைக்கப்பட்டு மனதை உலுக்கும் வகையில் திரைக் கதையாக்கம் செய்யப்பட்டுள்ளது. படத்தில் எங்கும் ஹிந்த் வரமாட்டாள். அவளின் உறைய வைக்கும் குரல் மட்டுமே கேட்கும். படம் முழுமையும் ரெட் கிரசன்ட் மீட்பு மையத்திலே உருவாக்கப் பட்டுள்ளது. மையத்தின் கேபின்களுக்குள்ளே சுழன்று சிறப்பான ஒளிப்பதிவு செய்யப் பட்டுள்ளது.ஹிந்தின் உணர்ச்சிமயமான குரலே படம் முழுதும் கேட்க,இது படம்  பார்ப்போரை பதற்றத்தில் தள்ளுவ தோடு கதறவும் வைக்கிறது. பின்னணி  இசையும் கதையின் தன்மைக்கேற்ற வாறு சிறப்பாக பங்காற்றியுள்ளது. மீட்புக்குழு ஊழியர்களாக நடித்துள்ள ஷாஜா கிலானி, மோடாஸ் மல்கீஸ்,அமீர் லகெல் மற்றும் கிளாரா ஹெரி ஆகியோரின் நடிப்பு பிரமாதம் என்றாலும், ஹிந்தின் உண்மையான குர லுக்கு முன், இவர்களது நடிப்பு அர்த்த மற்றுப் போகிறது.  இத்திரைப்படம் புனே,பெங்களூரு, போன்ற இந்திய நகரங்களில், முறையே 2026 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாக்களின் திரையிடல் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.ஆனால்,விழா நேரத்தில் திடீரென ஒன்றிய அரசு,இப்படத்தை திரையிடத் தடை விதித்தது. “தி மேன் ஷோல்ட் ஹிஸ் ஸ்கின்” (2020)என்ற வெற்றி படத்தை இயக்கிய துனிசிய திரைப்படத் தயாரிப்பாளர் கௌதர் பென் ஹானியா என்ற பெண்  இயக்குநரே இப்படத்தையும் இயக்கி யுள்ளார். 2025-வெனிஸ் திரைப்பட விழாவில் “தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த்  ரஜப்” திரையிடப்பட்ட பிறகு 23 நிமிடங் கள் பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி(Standing Ovation)நெகிழ்ந்தனர்.திரையிடலின் போது, பார்வையாளர்களில் பலரும், பல பத்திரிகையாளர்களும் கண்ணீர் சிந்தி அழுதனர் என்றும் சர்வதேச பத்திரிகைகள் எழுதியுள்ளன. இது ஹிந்தின் அபயக்குரல் அல்ல.  22000க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தை களை இஸ்ரேலால் இனப்படுகொலை செய்யப்பட்டதை வேடிக்கைப் பார்த்த  உலக நாடுகளின் அரசியல் தலைமை களின் மனசாட்சியை உலுக்கும்,உயிர் சுண்டி இடி முழக்கமிடும் குரல்.