tamilnadu

img

மதவெறிச் சக்திகளை முறியடிப்போம், மதச்சார்பற்ற சக்திகளை வெற்றி பெறச்செய்வோம் – தமுஎகச மாநிலக்குழு

மதவெறிச் சக்திகளை முறியடித்து, மதச்சார்பற்ற சக்திகளை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென தமிழக வாக்காளர்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் அளித்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் 17ஆவது சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் நாள் நடைபெற உள்ளது. வகுப்புவாத சக்திகளின் கொடுஞ்செயல் திட்டங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட கடந்த பல ஆண்டுகளாகவே வலதுசாரி சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். இருந்த போதும் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் காக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கிவருகிறது,தமிழ்நாட்டு மக்கள் வகுப்புவாத சக்திகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். அந்த மரபை இந்தத் தேர்தலிலும் காத்திட வேண்டும் எனவும், மதவாத சக்திகளை முறியடித்து, மதச்சார்பற்ற சக்திகளை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் தமிழக வாக்காளர்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இந்தியாவின் அழகே அதன் பன்முகப் பண்பாடு தான்.அதைச் சிதைத்து ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி என்று ஒற்றைப் பண்பாட்டை திணிக்க நினைக்கும் சக்திகள் தொடர்ந்து தமிழ்நாட்டை இலக்கு வைத்து படையெடுத்து வருகிறார்கள். அதற்கு எதிராக, மாநில உரிமை, தமிழ் மற்றும் தமிழர் உரிமை, பல சமய வழிபாட்டு உரிமை, பன்மைத்துவப் பண்பாட்டு உரிமை உள்ளிட்டவைகளைத் தமிழ்நாடு தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறது. இதன்மூலம் தன்னைத் தாக்கவரும் எதிரிகளுக்கு எதிராக ஒரு தற்காப்புப் போரை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த நீண்ட நெடிய போரின் ஒரு பகுதி தான் வரும் 17ஆவது சட்டமன்றத் தேர்தல்.அந்த வகையில் இத்தேர்தல் இப்போரின் மிக முக்கியமான கட்டமாகும்.

நீட் தேர்வு, தேசியக் கல்விக் கொள்கை, இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பு போன்றவற்றின் மூலம் நாட்டின் எல்லா வகையான தனித்துவங்களையும் அழிக்கத் தொடங்கிய அவர்களின் அதிகாரக் கரங்கள், இன்று மிகச்சிறிய தனித்த அடையாளமாகக் காணப்படும் திருநர் உரிமையை பறிக்கும் வரை நீண்டுள்ளது. வக்பு வாரிய திருத்தச்சட்டம் தொடங்கி, தற்போது வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் வரை சிறுபான்மை மக்களைத் துன்புறுத்தி அவர்களின் வாழ்வுரிமையைச் சிதைக்கும் அத்தனை வேலைகளையும் சட்டப்பூர்வமாகச் செய்து வருகிறது. அயோத்தியில் பற்றவைத்த கலவரத் தீயை, இன்று நம் வீட்டு வாசலான திருப்பரங்குன்றத்தில் "தீபத்தூண்" எனும் பெயரில் ஊதி விளையாடுகிறார்கள். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய சரியான சதவிகிதத்தைக் குறைக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை சுயேச்சையாக திருத்தப் பார்க்கிறார்கள்.

இந்தியாவின் பன்முகப்பட்ட பண்பாட்டை காக்கும் தன்னாட்சியோடு இயங்கும் நிறுவனங்களான சாகித்ய அகாதமி போன்ற அமைப்புகளின் சுயேச்சையான செயல்பாட்டைப் பறிப்பதில் தொடங்கி கருத்துரிமை பேசும் அத்தனை நிறுவனங்களும் மௌனமாக்கப்படும் சூழலில் நமது வாக்குகள் குரலாக மாறவேண்டும். மதவெறியையும் அதைக் காக்க சாதி வெறியையும் தூண்டி வரும் அவர்கள், தங்கள் தத்துவத்தின் சாதியப் படிநிலையை பாதுகாக்க இட ஒதுக்கீடுகளே இல்லாமல் செய்யும் செயலை எல்லாத் துறைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக செய்யத் தொடங்கி சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கப்பார்க்கிறார்கள்.

அதன் மூலம் சனாதனம் முன்னிறுத்தும் வர்ணாசிரம கோட்பாட்டை அமலாக்கத் துடிக்கும் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். '12ஆயிரம் ஆண்டுக்கால இந்திய வரலாற்றை' எழுதக் குழு அமைத்த அவர்கள், அதன் மூலம் புராணங்களையும் புரட்டுகளையும் வரலாறாக மாற்றத் துடிக்கிறார்கள். ஆனால் கண்ணுக்கு முன் அறிவியல் ஆதாரங்களோடு கிடைத்துள்ள கீழடி கண்டுபிடிப்புகளை மறைப்பதோடு, அதன் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடவும் மறுக்கிறார்கள்.

இந்தியாவிற்குள் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கையிலும் இந்நாட்டின் மரபார்ந்த பண்பை சிதைத்து வருகிறார்கள். மூன்றாம் உலக நாடுகளில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களையும், விடுதலையுணர்வையும் ஆதரித்து வந்த மரபே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. மூன்றாம் உலக நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்விற்கு எப்போதும் நாம் துணை நின்றுள்ளோம். அந்த வகையிலேயே நாம் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை ஆதரித்து வருகிறோம். ஆனால் இன்று  பள்ளிக் குழந்தைகளையும், அப்பாவி மக்களையும் போர் எனும் பெயரால் படுகொலை செய்யும் ஏகாதிபத்திய நாடுகளை கட்டியணைத்துக் கொண்டாடுவதோடு, அவர்கள் செய்யும் படுகொலைகளுக்கு ஆயுதம் வழங்கும் அளவிற்கு இந்நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் செய்து வருகிறார்கள். இந்தச் சூழலில் இந்திய அரசின் இந்தத் தலைகீழ் மாற்றத்திற்கு எதிராகவும் நாம் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து இந்நாட்டின் மரபார்ந்த பன்மைத்துவத்தை சிதைத்து வருபவர்கள் தற்போது தமிழ்நாட்டை சிதைக்கும் செயலுக்காக இந்தத் தேர்தலை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளாரகள். அதற்கு தமிழ்நாட்டில் உள்ள சில மாநிலக்கட்சிகள் நேரடியாகவே உதவுகின்றன. இன்னும் சில கட்சிகள் அவர்கள் கூட்டணியில் இல்லாத போதும் மறைமுகமாக அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இந்தச் சூழலில் மதவாத சக்திகளைப் புறக்கணிப்பதோடு, சரியான மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில்  மதவாத சக்திகளை பெயருக்கு எதிர்ப்பவர்களையும் சேர்த்து இத்தேர்தலில்  புறக்கணிக்க வேண்டும். அதோடு, மதச்சார்பற்ற, இடதுசாரி ஜனநாயக முற்போக்குச் சக்திகள் இடம்பெற்றுள்ள அணியை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் தமிழக வாக்காளர்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.