இருகூர் மக்களின் விழிநீர் துடைத்த செங்கொடி!
சொந்த மண்ணில் ஒரு பிடி நிலம், தலைசாய்க்க ஒரு கூரை - இது உழைக்கும் வர்க்கத்தின் ஆகப்பெரும் கனவு. கோவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இருகூர் மண்ணில், 292 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினக் குடும்பங்களின் இந்தக் கனவு, கடந்த 30 ஆண்டு களாகச் சட்டச் சிக்கல்களின் பிடியில் சிக்கியிருந்தது. இன்று அந்தத் தடைகளை உடைத்தெறிந்து, ஆனந்தக் கண்ணீரோடு மக்கள் தங்களின் வீட்டு மனைகளில் குடியேறியுள்ள காட்சி, தமிழக சமூக நீதி வரலாற்றில் ஒரு முக்கியப் பதிவாக மாறியுள்ளது. மூன்று தசாப்த கால நீண்ட பயணம் இந்த நெடிய பயணத்தின் தொடக் கம் 1993-ஆம் ஆண்டு. இருகூர் ஹரி ஜன சேவா சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் வட்டா ரக் குழு இணைந்து, நிலமற்ற ஒடுக்கப் பட்ட மக்களுக்காக வீட்டுமனை பட்டா கோரி முன்னெடுத்த மனுவே முதல் விதை. 1993 அக்டோபர் 1-இல் வட்டாட்சி யர் மேற்கொண்ட கள ஆய்வில், அந்த இடம் குடியிருப்புக்கு உகந்தது என உறுதி செய்யப்பட்டது. 1894 நில ஆர்ஜித சட்டத்தின் கீழ், 7 ஏக்கர் 29 சென்ட் நிலத்தைக் கையகப் படுத்த 1994இல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அன்றைய உரிமையா ளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை யான ரூ. 6,12,781 வழங்கப்பட்டு, 1996இல் பட்டாக்களும் தயார் செய்யப் பட்டன. ஆனால், அந்த எளிய மக்களின் மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. சதிகாரர்களின் முட்டுக்கட்டையும் சட்டப் போராட்டமும் அரசு நிலத்தைக் கையகப்படுத்திய பிறகும், பட்டியலின மக்கள் அந்த நிலத்தை அடைந்துவிடக் கூடாது என்ற தீய எண்ணத்துடன் சில சுயநல சக்தி கள் முட்டுக்கட்டை போட்டன. 2017-இல் போலியான ஆவணங்களை உரு வாக்கி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து மக்களின் குடியேற்றத்தை தடுத்து வந்தனர். இங்குதான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் உறுதி மிக்கப் போராட்டம் வலுவாக எழுந்தது. முப்பது ஆண்டுகளாகச் சட்ட ரீதி யாகவும், கள ரீதியாகவும் அயராது போராடியதன் விளைவாக, கடந்த செப்டம்பர் 20, 2025 அன்று நீதி மன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. “அரசின் நில எடுப்பு நடவடிக்கை முற்றிலும் சட்டப் பூர்வமானது” என நீதிமன்றம் அறிவித்த தோடு, சதிகாரர்களின் போலி ஆவ ணங்கள் அம்பலப்படுத்தப்பட்டன. உரிமை மீட்பும் ஆனந்தக் கண்ணீரும் தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தினமான செப்டம்பர் 30 அன்று, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து நடத்திய “குடியேறும் போராட்டம்” அரசுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுத்தது. கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் தலைமையிலான தொடர் முயற்சிகளும், மாவட்ட ஆட்சியரின் நேரடித் தலையீடும் இறுதியாக வெற்றியை ஈட்டித் தந்தன. கடந்த செவ்வாய்க்கிழமை, அதி காரிகள் முன்னிலையில் 292 குடும்பங்களுக்கும் நிலம் அளந்து கொடுக்கப்பட்டது. தங்கள் வாழ்நாள் கனவு நனவான மகிழ்ச்சியில், மக்கள் நிலத்தில் கால் பதித்தபோது கண்கள் கலங்கின. “கூழுக்கும் கஞ்சிக்கும் கஷ்டப்பட்டாலும், சொந்த மண்ணில் ஒரு குடிசையில் அமர்ந்து உண்ண வேண்டும் என்பதே எங்கள் ஆசை. அதை இன்று இந்தச் செங்கொடி இயக்கம் சாத்தியமாக்கியுள்ளது” என நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர் பகுதி மக்கள். வெற்றிக்கு வித்திட்ட தோழர்கள் இப்போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மறைந்த தோழர் யு.கே. சிவஞானம், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், சி. பத்மநாபன், ஆறு முகம், ஆறுச்சாமி எனப் பல தலை வர்களின் பங்களிப்பு அளப்பரியது. தற்போதைய களப்பணிகளில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி. தெய்வேந்திரன், சூலூர் தாலுகா செயலாளர் சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் ஸ்டாலின்குமார் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர். மகேஷ்வ ரன், செயலாளர் த. நாகராஜ், பொரு ளாளர் சுப்பிரமணி உள்ளிட்ட பல தோழர்கள் உடனிருந்து இந்த வெற்றி யை உறுதி செய்துள்ளனர். இருகூர் மக்களின் இந்த வெற்றி, தமிழகத்தின் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற் கான ஒரு பெரும் நம்பிக்கையாக ஒளிவீசுகிறது! - ஆர்.மகேஷ்வரன்
