tamilnadu

img

நண்பர்களை வேகமாக இழக்கிறீர்கள்... சிஏஏ- என்ஆர்சி விவகாரத்தில் வெளிநாட்டுத் தூதர்கள், ராஜீய அதிகாரிகள் கருத்து

புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலம், இந்தியா அதன் நட்பு நாடுகளின் மதிப்பை வேகமாக இழந்து வருவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு படம் பிடித்துள்ளது. இதுதொடர்பாக, சுமார் 16 நாடுகளின், தூதர்கள், ராஜீய அதிகாரிகள் தங்களின் கவலையை வெளிப்படுத்தி இருப்பதாகவும் அந்த ஏடு கூறியுள்ளது. ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

குடியுரிமைச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம் என்று வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் ராஜீய அதிகாரிகள் கூறினாலும், அது பெயரளவிற்கான கருத்தே ஆகும். உண்மையில்இவ்விவகாரத்தில் உலக நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன.‘புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலையொட்டிய, பதிலடி நடவடிக்கை என்று கூறப்பட்ட பாலகோட் விமானப்படை தாக்குதல், காஷ்மீர் மற்றும் அயோத்தி தீர்ப்பு ஆகியவை குறித்து, இது உள்நாட்டு விவகாரம் என்று இந்திய அரசு எங்களிடம் விளக்கம் அளித்தது. ஆனால் சி.ஏ.ஏ. குறித்து எந்த விதமான விளக்கத்தையும் இந்தியா அளிக்கவில்லை. 

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து டிசம்பர் 31, 2014-க்கு முன்பு வந்த சீக்கியர்கள், இந்துக்கள், புத்த மதத்தினர், ஜெயின்கள், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும். ஆனால் இஸ்லாமியர்களுக்கு இல்லை என சி.ஏ.ஏ. சட்டம் வரையறை செய்கிறது. ஆனால், இது இந்தியாவின் 3 அண்டை நாடுகளை உள்ளடக்கியதும் கூட’ என்று ‘ஜி20’  கூட்டமைப்பின் தூதர்கள் கூறியுள்ளனர். ‘சி.ஏ.ஏ. மிகவும் உணர்ச்சிகரமானது. நிச்சயமாக இது இந்தியாவுடனான இருநாட்டு உறவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று ஜி-20 கூட்டமைப்பு மட்டுமன்றி, பி-5 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள், தூதுவர்களும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, பல்வேறு பிரிவினரும் 
கலந்து கொள்வதால், இது முழுக்க முழுக்க அரசுக்கு எதிரான போராட்டம் என்றே வெளிநாட்டு தூதர்கள் கருதுகிறார்கள். வங்கதேச அமைச்சர்களும், ஜப்பான் பிரதமரும் இந்திய பயணத்தை ரத்து செய்ததற்கும் இதுவே காரணம்.அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கு எதிரான கருத்து கொண்ட பிரமிளா ஜெய்பால் கலந்துகொண்ட சந்திப்பில் பங்கேற்க மறுத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்களாக கருதப்படும் எலிசபெத் வாரன் மற்றும் பீட்டர் பட்டிஜீக் ஆகியோர் பிரமிளாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுவும் உலக நாடுகளிடையே இந்தியாவுக்கு ஒரு பின்னடைவு என்று கூறப்படுகிறது.ஐரோப்பிய நாட்டின் தூதர் ஒருவர், “இந்தியாவின் பிம்பம் வெளிநாடுகளிடையே நாளுக்கு நாள் சிதைந்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடு மற்றும் அடக்குமுறை குறித்த செய்திகள், இந்திய நிலையை மிகவும் பலவீனப்படுத்தி, வருகின்றன. இது இந்திய அரசின் சகிப்பின்மையைக் காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஜெர்மன் மாணவர் மற்றும் நார்வே சுற்றுப்பயணி ஆகியோர் அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனைக் குறிப்பிட்டு, ஜி20 நாடுகள் ஒன்றின் தூதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நல்ல விதமாக காட்டவில்லை” என்று கூறியுள்ளனர்.“இந்தச் சட்டம் ஒரு மதச்சார்பற்ற தேசமான இந்தியாவின் தன்மையை பலவீனப்படுத்தக் கூடும்” என்று வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமனும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் “இந்தியாவில் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்” என்று ​​மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவும் ஏற்கெனவே அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக்கேல் ஆர் பாம்பியோ, “சிறுபான்மையினரையும் மத உரிமைகளையும் பாதுகாப்பதில் அமெரிக்கா ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது” என்று கூறியிருந்தார்.இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர்,  “குடியுரிமைச் சட்டமானது, அடிப்படையிலேயே பாகுபாடு கற்பிக்கிறது” என்றுகுறிப்பிட்டுள்ளார். மேலும், “சமத்துவத்திற்கான உறுதிப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக தோன்றுகிறது” என்றும் தெரிவித்துள்ளார். சுமார் மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கும் ஒரு ராஜீய அதிகாரி ஒருவர், “இந்த குடியுரிமைச் சட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுடன், ஆளும் கட்சி 303 இடங்களைப் பெறுவதற்கான மக்களின் உணர்வு - நல்ல காரணி மறைந்துவிட்டது” என்று விமர்சித்துள்ளார்.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள், தங்கள் நாட்டுச் சுற்றுலாப் பயணிகள், இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

;