tamilnadu

img

டாஸ்மாக் விவகாரம்... உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும் தமிழக அரசு 

தில்லி 
நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு மூன்றாம் கட்ட ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 17-ஆம் தேதி நிறைவு பெறும் நிலையில், மத்திய அரசு சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் ஊரடங்கு தளர்வு விசயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழக அரசு வியாழனன்று டாஸ்மாக் கடைகளைத் திறந்தது.

ஊரடங்கால் உணவின்றி மக்கள் தவிக்கும் நிலையில், தமிழக அரசு டாஸ்மாக்கை திறந்தது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மார்க்சிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.முதல் 2 நாட்களில் டாஸ்மாக் எதிர்பார்த்ததை விட அதிக வருமானத்தை ஈட்டியது. பல இடங்களில் சமூக இடைவெளியின்றி கும்பலாக நின்று மது பிரியர்கள் மது வாங்கியதால், தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்க அனுமதி வழங்கியது. 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதைக் காரணம் காட்டி உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், மாநில எல்லைகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைத் தவிர்க்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும் மேல் முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.