வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்ற இரு அவைகளிலும் 2 வாரத்திற்கு முன்பு முஸ்லிம் மக்களை ஒடுக்கும் நோக்கத்தில் வக்பு வாரிய திருத்த மசோதாவை மோடி அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில், மசோதா சட்டமாக மாறியது. இந்நிலையில், வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
வக்பு சட்டம் நம் நாட்டின் மத நம்பிக்கை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை மீறுகிறது; முஸ்லிம்களை ஓரங்கட்டுவதற் கான வாய்ப்பாகவும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்பாகவும் ஆர்எஸ்எஸ் - பாஜக இதனைப் பார்க்கிறது என அண்மையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மனுத் தாக்கல் செய்யும்படி, சட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சட்டத்துறை அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்துள்ளார்.