குடிநீர் வழங்காததால் பெண்கள் சாலை மறியல்
போச்சம்பள்ளி வட்டம், மத்தூர் அருகே சாலஜோகிப்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். புதிய நீர்த்தேக்க தொட்டி இருந்தும் பல மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததால், பெண்கள், குழந்தைகள் 50 பேர் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் பயணிக்கும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க உறுதியளித்ததால் பெண்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.
