tamilnadu

img

சூரப்பட்டில் பாழடைந்து கிடக்கும் வாரச்சந்தை மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா

சூரப்பட்டில் பாழடைந்து கிடக்கும் வாரச்சந்தை மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா

விழுப்புரம், ஆக.20- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், காணை ஒன்றியம், சூரப்பட்டு பகுதியில் அங்குள்ள ஏரிக்கும் ஓடைக்கும் இடையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் பல ஆண்டுகளாக வாரந்தோறும் புதன்கிழமையன்று   சந்தை நடந்து வந்தது. இந்த சந்தைக்கு சூரப்பட்டு, கெடார், அதனூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் வெண்டை, கத்திரி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மற்றும் ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகியவற்றைக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். வியாபாரிகளும் பூண்டு, புளி, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்து வந்த னர். இதனால் வாரந்தோறும் சந்தையில் சுற்றுப்புற கிராம மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் பெரும்பாலோர் பயனடைந்து வந்தனர். ஆனால் சந்தைக்கு வருவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதாகக் காரணம் கூறி சந்தை வாரத்திற்கு வாரம் செயல்பாடு குறைந்து செயல்படாமல் போய்விட்டது. உப்பு சப்பில்லாத கார ணத்தைக் கூறி சந்தை செயல்பாட்டை முடக்கிப் போட்டுவிட்டதாக அதனைப் பரா மரிப்பு செய்யும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் உழ வர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால் விடை தான் கிடைக்க வில்லை என அவர்கள் ஆதங்கப்படு கின்றனர். இந்நிலையில் இந்த வாரச்சந்தையில் பல லட்சம் மதிப்பில் உழவர்கள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யும் வகையில் கடைகள் புதி தாகக் கட்டப்பட்டன. ஆனால் அவை பயன்பாட்டுக்கு வராமலேயே பாழடைந்து முடங்கி முட்புதர்கள் சூழ்ந்து கிடக்கின்றன. வாரச்சந்தை செயல்படாமல் முடங்கி முட்புதருக்குள் அதன் கட்டிடங்கள் மறைந்து கிடப்பதால், அங்கு சுற்றுப்புற சமூக விரோதிகள் பலர் எந்நேரமும் அமர்ந்து மது அருந்துவது மற்றும் சூதாடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி வாரச்சந்தையைச் சுற்றிலும் முட்புதர்கள் கட்டிடத்தைச் சூழ்ந்து காணப்படுவதால் உடனடியாக முட்புதர்களை அகற்றி, சுற்றுப்புற மக்களின் பயன்பாட்டுக்கு வாரச்சந்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வர வேற்று காத்துக்கிடக்கின்றனர். தமிழகம் முழுவதும் உழவர் சந்தையை விரிவுப்படுத்தி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அரசு உத்தர விட்டுள்ளதன் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களிலும் உழவர் சந்தையில் விரிவாக்கப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் இதில் உடனடியாகத் தலையிட்டு சூரப்பட்டில் பயன்பாடின்றி பாழடைந்து வரும் வாரச்சந்தை கட்டிடத்தைச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட துறை சார்பில் "வரும்" ஆனால் "வராது" என்ற பதில் நீடித்து வருகிறது என்பதே உண்மை. - பாவாடை பொன்னுசாமி