நெய்வேலியில் துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா
கடலூர், செப்.30- என்எல்சி இந்தியா நிறுவனத்தின் கல்வித்துறை உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து மாநில துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா நெய்வேலியில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளி மாணவர்களுக்கு துளிர் திறனறிதல் தேர்வு தமிழக முழுவதும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் 4 இடங்களில் மண்டல அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிழக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மாவட்ட அளவில் தேர்வு செய்த மாணவர்களுக்கு துளிர் அறிவியல் திருவிழா நெய்வேலி வட்டம் 9ல் உள்ள என்எல்சி நடுநிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது. இதில் கல்வி சுற்றுலாவாக என்எல்சி நிலக்கரி சுரங்கத்தை மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் ஸ்டீபன் நாதன் முன்னிலையில் கடலூர் மாவட்டச் செயலாளர் தனலட்சுமி தலைமையில் விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாநில கல்வி குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மாதவன், துளிர் பொறுப்பாசிரியர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், டாக்டர் செந்தில், பொன்முடி ஆகியோர் கருத்துரை வழங்கினர். பொம்மலாட்ட நிகழ்வினை மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் நந்த ராஜேந்திரன் நடத்தினார். இந்த அறிவியல் சுற்றுலாவை என்எல்சி நிறுவனத்தின் துணைப் பொது மேலாளரும், கல்வித் துறையின் செயலாளருமான பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பத்து மாவட்டங்களில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள் நிலக்கரி சுரங்கம் 1ல் களப்பயணம் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மகிழ்ச்சியுடன் கற்றல், தொலைநோக்கு நிகழ்ச்சி, ஓரிகாமி அறிவியல் பரிசோதனைகள், அறிவியல் விந்தைகளை விளக்குதல் என பல்வேறு அறிவியல் செயல்பாடுகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் தாமோதரன், நெய்வேலி நகர செயலாளர் கொளஞ்சியப்பன், என்எல்சி பொது மேலாளர் வைத்தியநாதன், கல்வித்துறை செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டத் துணைத் தலைவர் பூர்வ சந்திரன் நன்றி கூறினார்.
