பத்மஸ்ரீ விருது பெற்ற தெருக்கூத்து கலைஞருக்கு தமுஎகச பாராட்டு
திருவண்ணாமலை, அக்.5- பத்மஸ்ரீ விருது பெற்ற தெருக்கூத்து கலைஞர் புரசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. திருவண்ணாமலை பெரியார் சிலை எதிரே உள்ள கார்மல் கிண்டர்கார்டன் பள்ளி வளாகத்தில், நாடகவியலாளர் காளிதாஸ் நினைவரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் நா.முத்துவேலன் தலைமை வகித்தார். அருண் ஆதவன் வரவேற்புரை ஆற்றினார். திருவண்ணாமலை தமிழ்ச் சங்கம் சி.எஸ்.துரை, கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகோபால் ஆகியோர் தமுஎகச சார்பில் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தனர். தமிழ்ச்சங்க தலைவர் சி.எஸ்.துரை பேசுகையில், “தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக ஐந்து தலைமுறையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் புரசை கண்ணப்ப சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட விருது, சமகால நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட விருதாக பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார். மாவட்ட தலைவர் முத்துவேலன் பேசுகையில், “தெருக்கூத்து கலையில் தமிழ் இலக்கியத்தை மாற்றாமல் முற்போக்கு கருத்துக்களை சேர்த்து ஏழை, எளிய மக்களுக்கு பொதுவுடைமை கருத்துக்களை விதைத்து வருபவர் புரசை கண்ணப்ப சம்பந்தன். பரசுராம தம்பிரான், வீராசாமி தம்பிரான், ராகவ தம்பிரான், நடேசன் தம்பிரான், கண்ணப்ப தம்பிரான், சம்பந்த தம்பிரான் என ஆறு தலைமுறைகளாக நாட்டுப்புற கலையை வளர்க்கும் இவர், புரசை கிராமத்தில் இன்றும் தெருக்கூத்து கலைப் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார். இவருக்கு 1995இல் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தற்போது பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதால் அந்த விருதுக்கு பெருமை சேர்ந்துள்ளது” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் மா.சுவாமிநாதன் எழுதிய “ஊர் என்று எதனைச் சொல்வீர்” என்ற கட்டுரைத் தொகுப்பை தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் அ.செந்தில்குமார் வெளியிட, கவிஞர் வேல்கண்ணன் பெற்றுக்கொண்டார். பெரணமல்லூர் சேகரன் எழுதிய “ஒரடி பின்னால் மூன்றடி முன்னால், காதலாகி கசிந்துருகி” குறுநாவல் தொகுப்பை வட்டாட்சியர் பாலமுருகன் வெளியிட, பேராசிரியர் செந்தில்வேலன் பெற்றுக்கொண்டார். கவிஞர் உ.கிருஷ்ணமூர்த்தி எழுதிய “பரங்கிப்பூ பூப்பதைப் பார்க்க நேரமில்லை” என்ற கவிதைத் தொகுப்பை க.செல்வி வெளியிட, தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பிரபாகரன் பெற்றுக்கொண்டார். இந்த நூல் குறித்து தமுஎகச மாநில பொருளாளர் சைதை.ஜே கருத்துரையாற்றினார். ஏழுமலை ஜமா குறும்படம் குறித்து மாவட்ட செயலாளர் மு.பாலாஜி உரையாற்றினார். முன்னதாக வைகறை இசைக்குழுவினரின் பாடல்கள் மற்றும் மெல்லிசை பாடல் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
