காப்பீடு குறித்த விழிப்புணர்வு அதிகமுள்ள மாநிலம் தமிழ்நாடு
சென்னை, ஆக. 22- இந்தியாவிலேயே காப்பீடு குறித்த விழிப்புணர்வு அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது. விழிப்புணர்வு பெற்ற 70 விழுக்காட்டினர் அடுத்த 3–6 மாதங்களுக்குள் ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அண்மையில் காப்பீட்டு விழிப்புணர்வு குழு (ஐஏசி/ லைப்) நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. 63விழுக்காட்டினர் சேமிப்புடன் இணைக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள் என்று சென்னையில் இந்த முடிவுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் இணைத்-தலைவர் வெங்கடாசலம் கூறினார். தற்போது 34விழுக்காட்டினர் சேமிப்பு அடிப்படையிலான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வைத்துள்ளனர். ஏற்கனவே காப்பீட்டுத் திட்டத்தை வைத்திருப்பவர்கள் மத்தியில் காப்பீட்டுத் திட்டத்தை வாங்க ஊக்கமளிக்கும் முக்கிய காரணிகளாக குடும்பத்திற்கான நிதி பாதுகாப்பு (63விழுக்காடு) மற்றும் குழந்தையின் எதிர்காலம் (48விழுக்காடு) ஆகியவை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பதிலளித்தவர்களில் 88விழுக்காட்டினர் எதிர்பாராத வாழ்க்கை நிகழ்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிடவும், அதற்காக தயாராக இருக்கவும் விரும்புவதாகக் தெரிவித்துள்ளனர்.