ரேசன் அரிசி வழங்காத புதுவை அரசு மாதர் சங்கம் நூதன போராட்டம்
புதுச்சேரி, செப்.30- புதுச்சேரி ரேசன் கடைகளில் அரிசி வழங்காத என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் செவ்வாயன்று நூதனப்போராட்டம். ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் பணம் வழங்கப்பட்டு வந்தது. பணத்திற்கு பதில் மீண்டும் அரிசி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் தொடர்ந்து போராட்டங் களை நடத்தி வந்தது. அதன்படி புதுச்சேரி ரேசன் கடைகளில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் இலவச அரிசி மட்டும் வழங்கப்பட்டது. இந்நிலையில், வழங்கப்பட்டு வந்த அரிசி கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட வில்லை. எனவே இலவச அரிசியை உடனே வழங்க வேண்டும், தீபாவளி சிறப்பு அங்காடியை உடனே துவங்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினார். அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக தலைவர் விஜயா போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் இளவரசி, பொருளாளர் மாரிமுத்து, நிர்வாகிகள் சத்தியா, உமா, ஜானகி, மலர்விழி, மங்கலக்ஷ்மி, அன்பரசி ஜூலியட், தாரா, தவமணி, சிவசங்கரி, குப்பம்மாள் உட்பட திரளான பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக அண்ணா சிலையிலிருந்து துவங்கிய ஊர்வலத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை தனித்தனியாக பெண்கள் தலையில் சுமந்து எடுத்து வந்தனர். பின்னர் ரேசன் பொருட்களை வழங்க தொடர்ந்து காலதாமதம் செய்து வரும் புதுச்சேரி அரசை கண்டித்து, ரேஷன் பொருட்களை கண்டுபிடித்து தரக் கோரி கும்மியடித்து பாட்டு பாடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் ஈடுபட்டது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
