கொட்டும் மழையிலும் காவல்துறையின் சிறப்பான பணிக்கு பொதுமக்கள் பாராட்டு
விழுப்புரம், அக்.22- கொட்டும் மழையிலும் அயராது பணிபுரிந்து 50,000க்கும் மேற்பட்ட வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பாக அனுப்பிய விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தீபாவளிக்கு முன்பும் பின்பும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள் 77 கிலோமீட்டர் தூரம் கொண்ட தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்கின்றன. ஐந்து இடங்களில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வந்த நிலையிலும், தொடர் கனமழையால் சாலைகள் பழுதடைந்திருந்த போதிலும், கனரக வாகனங்களை மாற்றுப் பாதைக்கு அனுப்பி 50,410 வாகனங்களை நெரிசல் இன்றிச் செல்ல அனுமதித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் சாலை பாதுகாப்புப் பணியை நேரில் ஆய்வு செய்தார்.
