மழைநீர் வடிகால்வாய் கட்டியும் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் கழிவுநீரும் சேர்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
அம்பத்தூர், ஆக.31- ஆவடி அருகே கோவில்பதாகை பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை நீருடன் கழிவுநீர் கலந்து சூழ்ந்ததை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் ஞாயிறன்று (ஆக.31) சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆவடி கோவில்பதாகை நெடுஞ்சாலையில் கலைஞர் நகர் முதல் கன்னடபாளையம் வரை சாலையின் இருபுறமும் சுமார் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. இந்த கால்வாயில் மழை காலங்களில் சாலையில் தேங்கும் மழை நீர் கால்வாய்க்குள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கால்வாய் பகுதியில் சில இடங்களை உடைத்து மழை நீர் வெளியேறும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மழை பெய்யும் போதெல்லாம் உடைக்கப்பட்ட கால்வாய் பகுதியில் இருந்து மழை நீருடன் கழிவுநீர் கலந்து வெளியேறுகிறது. இந்த கழிவுநீர் ஆவடி மாநகராட்சி 5ஆவது வார்டில் கோயில்பதாகை பகுதியான எம்சிபி அவென்யு, கிருஷ்ணா அவென்யு, மங்கலம் நகர், பாலாஜி நகர், பிளாட்டினம் சிட்டி, டிரினிட்டி அவென்யூ ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நிற்கிறது. முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆவடி மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு பெய்த மழையால், கழிவு நீருடன் மழை நீரும் கலந்து மேற்கண்ட குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நின்றது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஆவடி - கோவில்பதாகை நெடுஞ்சாலையில் ஞாயிறன்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் போராட் டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் நடத்தினர். அப்போது அவர்கள், கோவில்பதாகை முதல் கன்னட பாளையம் வரை நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட மழை நீர் கால்வாய் முறையாக அமைக்கப்பட வில்லை. இதனால் மழை பெய்யும் போதெல்லாம் கழிவுநீருடன் கலந்து மழை நீரும் குடியிருப்பு பகுதி களில் சூழ்ந்து நிற்கிறது. இதை தடுக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காவல்துறையினர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசினர். அப்போது, மழை நீர் கால்வாய் உடைக்கப்பட்ட இடத்தை அடைத்து தண்ணீர் செல்லாதவாறு தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.