சிபிஎம் போராட்டத்தால் கோரிக்கைகளை நிறைவேற்ற ஊராட்சி நிர்வாகம் உறுதி
கரூர், அக். 7- கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம், நெய்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நெய்தலூர் காலனி 6 ஆவது வார்டு பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கு தார் சாலை, மின்விளக்கு, தண்ணீர் வசதி, இறந்தவர்களை புதைப்பதற்கான இடம், ஆகியவற்றை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெய்தலூர் காலனி கிளை சார்பில், நெய்தலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு, காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, கட்சி கிளைச் செயலாளர் பி. கணேசன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. ராஜூ, குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா. முத்துச்செல்வன், மாவட்ட குழு உறுப்பினர் பி. சங்கரநாரயணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காத்திருப்புப் போராட்டம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடனடியாக, புல்டோசர் மூலம் சுடுகாட்டை சுற்றிலும் சுத்தம் செய்து கொடுப்பதாக உறுதி கூறினார். அதன் அடிப்படையில் உடனடியாக புல்டோசர் வரவழைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அக்.11 ஆம் தேதியன்று சுடுகாட்டிற்கு சாலை போடும் பணியையும், மின்விளக்கு அமைக்கும் பணிகளும், தண்ணீர் வசதிக்கு போர் போடும் பணிகளும் நடைபெறும் என்று ஊராட்சி நிர்வாகம் உறுதியளித்ததின் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அரசு அதிகாரிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற, கொடுத்த வாக்குறுதியை அக். 11 ஆம் தேதியன்று அனைத்துப் பணிகளையும் துவங்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெய்தலூர் காலனி கிளையின் சார்பில் 13 ஆம் தேதி முதல் சுடுகாட்டில் காத்திருப்பு போராட்டத்தை நடத்துவோம் என்று கட்சியின் ஒன்றியச் செயலாளர் இரா. முத்துச்செல்வன் தெரிவித்துள்ளார்.
