மெரினா கடற்கரையில் எண்ணை கசிவு மீட்பு பயிற்சி 30 நாடுகளின் பார்வையாளர்கள் பங்கேற்பு
சென்னை, அக்.7- தேசிய மாசு தடுப்பு தினத்தை முன்னிட்டு, கடலில் எண்ணை கசிவு ஏற்படும் பேரிடர் சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக மெரினா கடற்கரையில் திங்களன்று விரிவான மாதிரி பயிற்சி நடைபெற்றது. இந்திய கடலோர காவல்படை பொது இயக்குநர் பரமேஷ் சிவமணி யின் மேற்பார்வையில் நடந்த இந்த பயிற்சியில், இரண்டு கப்பல்கள் மோதி எண்ணெய் கசியும் சம்பவம் மாதிரியாக உருவாக்கப்பட்டது. கடலோர காவல்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், விமா னங்கள், மாசுக்கட்டுப்பாட்டு படகுகள் ஆகியவை பயன்படுத்தி எண்ணை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடற்கரையை அடைந்த எண்ணை கசிவை அகற்றும் மீட்பு நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பி.பி.இ கருவிகளுடன் கலந்து கொண்டனர். தடுப்பு திரைகள், எண்ணை உறிஞ்சும் கருவிகள், ரசாயன தடுப்புகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. இந்திய கடலோர காவல்படை, சென்னை மாநகராட்சி, மாநில பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத்துறை, மீன்வளத்துறை, சென்னை துறைமுக நிர்வாகம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பார்வையாளர்கள் மற்றும் நிபுணர்கள், மாநகராட்சி ஆணையர் குமர குருபரன், தீயணைப்புத் துறை இயக்கு நர் சீமா அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.
