அரசின் புதிய திட்டங்கள்: கும்மிடிப்பூண்டியில் விழிப்புணர்வு முகாம்
திருவள்ளூர், ஆக.20- பாங்க் ஆஃப் இந்தியா சென்னை மண்டலம் மூலம் மறு கே.ஒய்.சி மற்றும் ஒன்றிய அரசின் நல திட்டங்களை பெறுவதற்கான விழிப்புணர்வு முகாம் புதனன்று (ஆக 20), நடைபெற்றது. பாங்க் ஆஃப் இந்தியா சென்னை மண்டலம் மூலம் திருவள்ளூர் மாவட்ட வங்கி கிளைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மறு கே.ஒய்.சி மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்களை பெறுவதற்கான முகாம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக் குப்பத்தில் நடைபெற்றது. இதில் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர்கள் அனிதா மெஹந்தி, மாரேதி மோகன், இணை பொது மேலாளர் கண்ணன், திருவள்ளூர் எல். டி.எம். தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக இயங்கி வரும் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், பூவலம்பேடு, ஆரணி, பொன்னேரி,பூச்சி அத்திப்பேடு, போந்தவாக்கம், பூவலம்பேடு உள்ளிட்ட 9 வங்கிக் கிளைகள் இணைந்து நடத்திய இந்த முகாமில் அப்டேட் விழிப்புணர்வு மற்றும்9 கிளைகள் இணைந்து 23 வர்த்தக தாளாளர்கள் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டது. மேலும் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டங்களான பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, அட்டல் பென்ஷன் யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா, சுரக்ஷா பீமா யோஜனா உள்ளிட்ட அரசு திட்டங்களில் இணைவதற்கு எளிய முறையில் அப்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமில் சுமார் 800 -க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.