tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை  மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு

தாம்பரம், ஆக. 6- தாம்பரம் சானிடோரியத்தில் ரூ.115.38 கோடியில் கட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தாம்பரம் சானிடோரியத்தில் செங்கல்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ.115.38 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு மருத்துவமனையை வரும் 9ம்தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி, மருத்துவமனை வளாகத்தில் விழா மேடை அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகி யோர் கலந்து கொண்டு விழா மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

காஞ்சிபுரத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்

காஞ்சிபுரம், ஆக.6- காஞ்சிபுரம் ஆர்டிஓ எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கிய 278 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திர மேரூர் உள்ளிட்ட பகுதிகளில் பொது சாலை களில் செல்லும் வாகனங்களை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாக ராஜ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது,  போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட 278 வாகனங்கள் கண்ட றியப்பட்டது. அதன்படி, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை சிறை பிடித்து அபராதம் விதித்த வகையில், ஜூலை மாதத்தில் 22 லட்சத்து 3 ஆயிரத்து 445 ரூபாய் அபராத தொகையாக வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது வாகன சோதனை நடைபெறும் என்றும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு அதிகப்படியான பயணிகளையும், பள்ளி குழந்தைகளுக்கு ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

டிப்பர் லாரி மோதி பெண் பலி

புழல், ஆக. 6-  சோழவரம் ஒன்றியம், நத்தம் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் நடராஜன்-சாந்தி தம்பதி. இவர்களுக்கு பாலா, பிரேமா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.     சாந்தி (55) பண்டிக்காவனூர் கிராமத்தில் உள்ள சிமெண்ட் கற்கள் தயார் செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் சமையல் வேலை செய்து வந்தார். இந்நிலையில், செவ்வாயன்று  மாலை வேலை முடிந்து தனியார் தொழிற்சாலையில் இருந்து வீட்டை நோக்கி சாந்தி நடந்து சென்றார். அப்போது மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் சாந்தி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் தலை சிக்கி  சாந்தி பலியானார்.

பத்திரிகையாளர் நலவாரியம் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை, ஆக.6- பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. “பத்திரிகை அலுவலர் நல வாரியம் கடந்த 1.12.2021 அன்று உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பத்திரிகை நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்துவதற்கு ஏதுவாக, செய்தித் துறை அமைச்சரை தலைவராகவும், 7 உயர் அரசு அதிகாரிகளை அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகவும், 6 பத்திரிகையாளர்களை அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் கொண்டு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அச்சு, காட்சி ஊடகம் மற்றும் காலமுறை இதழ்களை சேர்ந்த ஊடகவியலாளர்களும் இடம் பெறும் வகையில், அலுவல்சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கையை 6-ல் இருந்து 9-ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டது.  அதன்படி  ‘தினத்தந்தி’ குழுமத்தின் இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன், தினகரன், தமிழ் முரசு நாளிதழின் நிர்வாக ஆசிரியர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், நக்கீரன் ஆசிரியர் கோபால், தி இந்து நாளிதழ் துணை ஆசிரியர் கோலப்பன், தி வீக் வார இதழின் முதன்மை சிறப்பு நிருபர் லட்சுமி சுப்பிரமணியன், மாலை முரசு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் தம்பி தமிழரசன், தீக்கதிர் செய்தியாளர் கவாஸ்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சிறப்பு நிருபர் ரமேஷ், நியூஸ் 18 தொலைக்காட்சியின் தலைமை நிருபர் தமிழரசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வூதியதாரர் குறை கேட்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, ஆக. 6– சென்னையில் ஓய்வூதிய தாரர்களின் குறைகளை களை குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 25–ந்தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மிசித்தார்த்ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை தீர்க்கும் குறைதீர் நாள் கூட்டம் 12.9.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 8-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.  எனவே, ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் ஏதும் இருப்பின் சுருக்கமாக இரட்டை பிரதிகளில் கீழ்காணும் படிவத்தில் மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 62, இராஜாஜி சாலை, சென்னை–1 என்ற முகவரிக்கு 25.8.2025-க்குள் அனுப்பி வைத்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்தால் செஸ் போட்டி ஒத்திவைப்பு  

சென்னை, ஆக. 6- சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹையாத் நட்சத்திர ஹோட்டலில் செவ்வாயன்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அடுத்த சில நிமிடங்களிலேயே, தேனாம்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்குள் தீயை முழுமையாக அணைத்தனர். அடர்த்தியான புகை காரணமாக, ஓட்டல் நிர்வாகம் அனைத்து விருந்தினர்களையும் தரை தளத்திற்கு வெளியேற்றியது. காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த ஓட்டலில் தான் குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற இருந்தது. தீ விபத்து காரணமாக, இந்த போட்டி ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு வியாழனன்று நடைபெற உள்ளதாக  ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

வடிவுடையம்மன் கோயில் குளத்தில் மீன்கள் இறப்பு

திருவொற்றியூர், ஆக. 6-  திருவொற்றியூர் சன்னதி தெருவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தியாகராஜ சாமி வடிவுடையம்மன் கோயில் உள்ளது.   இக்கோயிலின் உள்புறத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் மீன்கள் மற்றும் வாத்துகள் உள்ளன.  இந்நிலையில், செவ்வாயன்று இந்த குளத்தில் இருந்த மீன்கள் இறந்து கிடந்தன.  இதுகுறித்து, கோயில் உதவி ஆணையர் நற்சோனை கூறுகையில், குளத்தில் அதிக அளவில் மீன்கள் இருந்ததால் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம். மீன்களை பாதுகாக்கவும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

தங்கம்விலை உயர்வு

சென்னை, ஆக.6- தங்கம் விலை புதனன்று (ஆக.5) கிராமுக்கு ரூ.10ம், சவரனுக்கு ரூ.80-ம் உயர்ந்துள்ளது. இதனால் மீண்டும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.75,000த்தை தாண்டியுள்ளது. தங்கம் ஒரு கிராமுக்கு 22கேரட் ரூ.9,380-க்கு விற்பனை யானது. ஒரு சவரன் ரூ.75,040-க்கு விற்பனை யானது. வெள்ளியின் விலை ரூ.126-க்கு விற்பனை யானது.