tamilnadu

img

தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்க உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம்வலியுறுத்தல்

தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்க உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம்வலியுறுத்தல்

திருவள்ளூர், அக் 11- தூய்மை பணியாளர்களை, தூய்மை காவலர்களை, டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி  திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூரில் வெள்ளியன்று (அக் 10), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 524 ஊராட்சிகள் உள்ளன.  இதில் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள்,  மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள்,  அரசு பள்ளியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள்,  டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள்,  சுகாதார ஊக்குனர்கள் என ஏறக்குறைய மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.  அதுவும் மாதம் ஆயிரம் ரூபாயில் துவங்கி 9 ஆயிரம் என மிகவும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்,  மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். மற்ற பிரிவினர் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர்.   இந்த நிலையில் இந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,  தமிழ்நாடு 2021 ல்  அரசாணை 256 படி கொரோனா  காலத்தில் ரூ.15 ஆயிரம் கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை தருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனை  காவல்துறையினர், மருத்துவர், செவிலியர், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோருக்கு ஊக்கத்தொகை வழங்கியது அதே போன்று துப்புரவு தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்து நிலுவையில் உள்ளதை வழங்க வேண்டும்,  7- வது ஊதியக்குழு அறிவித்து பத்து ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் நிலுவைத் தொகை வழங்கவில்லை, இதனை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில்இந்தஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம், மாநில துணை பொதுச் செயலாளர் வி.குமார், மாவட்ட துணை நிர்வாகிகள் எஸ்.எம்.அனீப்,  குமரவேல், குமாரி, விஜியா உட்பட்ட பலர் பேசினர்.