அச்சுறுத்தும் பைக் பந்தயம்: 4 பேர் கைது
விழுப்புரம், அக். 4- விழுப்புரம் நகர பகுதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் நகரப்பகுதி மற்றும் புறவழிச்சாலைகளில் இளைஞர்கள் சிலர் அடிக்கடி மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபடுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விழுப்புரத்தை அருகே கொட்டப்பாக்கத்து வேலி புறவழிச்சாலை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவரை கைது செய்தனர். இதேபோல், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு ரேசில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சியை சேர்ந்த பவுல், விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனை முன்பு ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த தமிழ்செல்வன், காந்திசிலை அருகில் கோலியனூரை சேர்ந்த புஷ்பராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் ரேசுக்கு பயன்படுத்திய வாக னங்களையும் பறிமுதல் செய்தனர்.
தாக்குதல்
கிருஷ்ணகிரி, அக்.4 - ஓசூர் பகுதியில் உள்ள குந்துமாரனப்பள்ளி கிராமத்தில் ஆஞ்சனேயர் கோயில் உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு இக்கோயிலுக்கு கூலிச்சந்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் மகன் 22 வயது சேகர் மது போதையில் சென்று கோயில் உண்டியலை உடைக்க முயன்றுள்ளார். இதையறிந்த கிராம மக்கள் சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
பட்டாசு கடைகளை மாநகருக்கு வெளியே அமைக்க கோபிநாத் எம்பி வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி, அக்.4 - ஓசூரில் பட்டாசு கடைகளை மாநகருக்கு வெளியே பாதுகாப்பான இடத்தில் அமைக்க வேண்டும் என்றும், டைடல் பார்க் பகுதியில் அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத் கோரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஓசூரில் 26 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்த முதலமைச்சருக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார். ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இடம் இறுதி செய்யப்பட்டு அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் விரைவில் பங்கேற்பார் எனவும் தெரிவித்தார். பெங்களூரு போல ஓசூர் மாநகரத்திற்கு வெளியே 5 கிலோமீட்டர் தொலைவில் பாதுகாப்பான இடத்தில் பட்டாசு கடைகளை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஓசூர் டைடல் பார்க் அமைந்துள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பொக்லைன் இயந்திரம் வைத்து சமன் செய்து தொழிற்சாலைகளுக்கான கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விடவும், நில விற்பனை செய்யவும் முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார். அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த இடங்களில் ஓசூர் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் டைடல் பார்க் அறிவு சார்மையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் நீலகண்டன், ரகு சின்னகுட்டப்பா, மாநகராட்சி உறுப்பினர் இந்திராணி, பிரவீன்குமார், சாதிக் சூரியகணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
கெடிலம் ஆற்றில் குடிநீர் குழாய் உடைப்பு: வீணாக கொட்டி தண்ணீர்
கடலூர், அக். 4 - கடலூர் கெடிலம் ஆற்றின் மேல் அமைந்துள்ள ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அருவி போல் ஆற்றில் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாநகராட்சியின் 45 வார்டுகளுக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கெடிலம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சிறிய பாலத்தின் வழியாக இந்தக் குழாய் செல்கிறது. இந்த குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் வீணாகக் கொட்டியது. குழாயில் ஏர் லாக் ஏற்பட்டதால் உடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் புதுப்பாளையம், வண்ணாரபாளையம், தேவனாம்பட்டினம், மஞ்சகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. சரிசெய்யும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த குழாயில் உடைப்பு ஏற்படுவதால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.'
சிறுபான்மையின மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க நிதியுதவி கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு
'கிருஷ்ணகிரி, அக்.4 - சிறுபான்மையின மாணவ, மாணவியர் வெளிநாடு சென்று படிக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்று படிக்கும் 10 இஸ்லாமிய மாணவர்களுக்கு தலா 36 லட்சம் ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க 3.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 2025-2026 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது. பட்டப்படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி பெற்று முதுகலை பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெற்றவராக இருக்க வேண்டும். www.bcmbcmw.tn.gov.in welfschemes-minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவ ணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு வரும் 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.