புதுச்சேரியில் ரூ.436 கோடியில் மேம்பாலம் கட்ட அடிக்கல்
புதுச்சேரி, அக்.13 – புதுச்சேரியில் ரூ.436 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் விழா நடைபெற்றது. புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை 3.877 கிலோ மீட்டர் நீளத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் ரூ.436 கோடியில் கட்டப்பட உள்ளது. அதேபோல் ரூ.25.05 கோடி மதிப்பில் 13.63 கி.மீ. தொலைவுக்கு புதுச்சேரியை ஒட்டியுள்ள கிழக்கு கடற்கரை சாலையும் மேம்படுத்தப்படவுள்ளது. இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ்காந்தி சதுக்கம் வரை அமைக்கப்படும் உயர்மட்ட மேம்பாலம் மொத்தம் 3.877 கி.மீ., நீளம் கொண்டதாக இருக்கும். இந்த மேம்பாலம் இந்திரா காந்தி சதுக்கத்துக்கு தெற்கே 430 மீட்டர் தொலைவில் தொடங்கி 100 அடி சாலை செல்கிறது. இந்திராகாந்தி சதுக்கத்தில் 620 மீட்டர் வடக்கே கிழக்கு கடற்கரை சாலையில் இறங்குகிறது. இதன் மொத்த நீளம் 2 ஆயிரத்து 200 மீட்டர். இந்திராகாந்தி சதுக்கத்தில் 17 மீட்டர் உள்விட்டம் கொண்ட உயர்நிலை வடிவ மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து கிழக்கில் பேருந்து நிலையம் வரை 863 மீட்டர் மேம்பால இணைப்பும், மேற்கில் விழுப்புரம் நோக்கி 300 மீட்டர் நீளத்துக்கு இணைக்கப்படுகிறது. அதேபோல் ராஜீவ் காந்தி சதுக்கத்தில் 40 மீட்டர் உள் வட்டம் கொண்ட வட்ட வடிவில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. திண்டிவனம் நோக்கி 524 மீட்டர் அளவில் இணைப்பு அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை கூட வேளாண் வளாகத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது. விழாவில் ஒன்றிய அமைச்சர் எல். முருகன், துணை நிலை ஆளுநர் கைலாசநாதன், முதல்வர் ரங்கசாமி மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், ஜெயக்குமார், திருமுருகன், ஜான் குமார் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார். விழாவையொட்டி புதுச்சேரி நகரப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
