கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை
திருவண்ணாமலை, ஆக. 18- தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெரணமல்லூர் ஒன்றிய இரண்டாவது மாநாடு மோசவாடியில் நடைபெற்றது. இணைச் செயலாளர் முனியம்மாள் தலைமை தாங்கிய இம் மாநாட்டில் செயலாளர் பழனி கொடியேற்றினார். சிபிஎம் பெரணமல்லூர் வட்டார செயலாளர் ந.பிரபாகரன் மாநாட்டை துவக்கி வைத்தார். ம.சாம்பசிவம் அறிக்கையை சமர்ப்பித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன், மாதர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் டி.லதா, வாலிபர் சங்க நிர்வாகி வெ.ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன் நிறைவுரையாற்றினார். நிர்வாகிகள் தேர்வு கோ.பெருமாள் வட்டத் தலைவராகவும், பி.கே.முருகன் செயலாளராகவும், எம்.சரஸ்வதி பொரு ளாளராகவும் உள்ளிட்ட 10 பேர் வட்டாரக் குழுவிற்குத் தேர்வு செய்யப்பட்டனர். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும், வேளாண்மைத் துறையில் இலவச இடுபொருட்கள் வழங்க வேண்டும், பாசனக் கால்வாய்களை தூர்வார வேண்டும்,பெரணமல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காரணமின்றி எஃப்ஐஆர் பதிவு பெண் தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை, ஆக. 18- திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த ஈச்சம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் - மனைவி பாரதி தம்பதிக்கும், அவர்களின் வீட்டின் அருகே வசிக்கும் ஆறுமுகம் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தனது எதிரி ஆறுமுகம் என்பவருக்கும் வேறு ஒரு நபருக்கும் தகராறு நடந்தபோது, ஊரில் இல்லாத தன் மீதும் கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் காரணமில்லாமல் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தனக்கும் குடும்பத்தாருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். திங்களன்று (ஆக.18) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதி தனது 4 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.