மங்களபுரம் மக்களுக்கு கணினி பட்டா வழங்க சிபிஎம் கோரிக்கை
சென்னை, ஆக. 8- அம்பத்தூர் வட்டம், அம்பத்தூர் வருவாய் கிராமம் சர்வே எண் 72இல் வசிக்கும் மங்களபுரம் கிராம மக்களுக்கு கணினி பட்டா வழங்க கோரி முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், சென்னை மாவட்டம், அம்பத்தூர் வட்டம், அம்பத்தூர் வருவாய் கிராமம், மங்களபுரம் கிராமம், சர்வே எண் 72க்கு (கிராம நத்தம்)உட்பட்டது மங்களபுரம் கிராமம். அம்பத்தூர் பகுதியில் பூர்வீக கிராமங்களில் ஒன்றாகும். இங்கே பல தலைமுறைகளாக வசித்து வருகிறார்கள். அம்பத்தூர் பகுதியின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தவர்கள். ஆனால் இன்று வரை குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே இலவச கணினி பட்டா வழங்க தமிழக அரசாணை வெளியிட விரைந்து ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், வார்டு-28ல் எம்.ஆர்.எச். சாலை, தபால் பெட்டி அருகிலுள்ள செபாஸ்டியன் ஆலயத்தில் வெள்ளியன்று (ஆக.8) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் சிபிஎம் மாதவரம் 28ஆவது வட்டக்கிளை சார்பில் பட்டா கோரிக்கையை முன்வைத்து மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனத்திடம் மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில், மண்டலக்குழுத் தலைவர் எஸ்.நந்தகோபால், மாமன்ற உறுப்பினர் சு. கனிமொழி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.