வியாபாரிகளிடம் தனிநபர்கள் வரிவசூல் சிபிஎம் கண்டனம்
ராணிப்பேட்டை, அக். 13 – மாம்பாக்கம் வாராந்திர சந்தையில் வியாபாரிகளிடம் வரி வசூல் செய்யும் தனி நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. கலவை வட்டம், மாம்பாக்கம் கூட்ரோடு வாழைப்பந்தல் சாலை ஓரமாக வாராந்திர சந்தை செவ்வாயன்று விவசாயிகள் வியா பாரம் செய்து வருகின்றனர். அங்கு சாலை யோர வியாபாரிகளிடம் கடந்த 10 ஆண்டு களாக கடைகளுக்கு வரி வசூல் செய்து வருகின்றனர். மேலும் இதில் மு. ஊராட்சி மன்ற தலைவர் உட்பட தனிநபர்கள் கூட்டாக இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. இப்படி வசூல் செய்யும் வரி பணத்தீர்க்கு வரவு செலவு கணக்குகளையும் முறையாக வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிராம சபை கூட்டத்தில் பராமரிப்பது இல்லை. பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக வியா பாரிகள் அதிகாரிகளிடம் முறையிட்டு இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரி வசூல் செய்ய தடை ஆணை பிறப்பித்துள்ளார். ஆனால் வாராந்திர சந்தையில் தொடர்ந்து தனிநபர்கள் ஒன்றி ணைந்து வியாபாரிகளிடம் வரி வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டு கின்றனர். கடந்த செவ்வாயன்று (அக்.7) ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் தனி நபர்கள் இணைந்து மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கையுடன், முறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சிபிஎம் கலவை தாலுகா குழு செயலாளர் எஸ். கிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.
மின்னல் சாவடி முதல் மின்னல் காலனி வரை சாலையை சீரமைக்க கோரிக்கை
ராணிப்பேட்டை, அக். 13 – அரக்கோணம் ஒன்றியம், மின்னல் ஊராட்சியில் மக்கள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர கோரி மின்னல் ஊராட்சி மன்ற தலைவர் டி. கோபி திங்களன்று (அக்13) மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில், மின்னல் ஊராட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மின்னல் சாவடி முதல் மின்னல் காலனி வரை தார் சாலை அமைக்க இருபுறமும் தோண்டப்பட்டு பாலாறு கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு அதை சீரமைக்காமல் பழுதடைந்து காணப்படுகிறது. அந்த வழியாக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் குண்டும், குழியுமாக சிரமத்திற்கு மத்தியில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாழடைந்த டி.பி.பங்களா பயணியர் மாளிகை சுற்றி உள்ள முட்புதர்களை பொதுமக்கள் நலன் கருதி சுத்தம் செய்ய வேண்டும். மின்னல் காலனியில் உள்ள சித்தேரியில் மதகு நீண்ட காலமாக பழுதடைந்து ஏரி முழுவதும் கொள்ளளவு நிரம்பியும் தண்ணீர் வெளியேற முடியாமல் உள்ளது. இதனை சீரமைத்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் வெளிதாங்கிபுரம் முதல் அரக்கோணம் வரை மினி பேருந்துகள் இயக்க வேண்டும் என மின்னல் பஞ்சாயத்து தலைவர் டி. கோபி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் கையாள்வது அவசியம்
சென்னை, அக்.13- செயற்கை நுண்ணறிவு (ஏஐ) இன்று நிதித் துறையின் மையத்திற்கே நுழைந்து, சேவைகளை வடிவமைக்கும், வழங்கும் மற்றும் அனுபவிக்கும் விதத்தையே மாற்றி வருகிறது என தேசிய கட்டண நிறுவனம் (என்பிசிஐ)-யின் நிர்வாகத் தலைவர் அஜய் குமார் சௌதரி தெரிவித்தார். மும்பையில் நடைபெற்ற ஆறாவது உலக நிதி தொழில்நுட்ப விழா 2025-இல் “ஏஐ யின் வாக்குறுதி மற்றும் அபாயம்: அனைவர் நிதிக்காக பொறுப்பான நுண்ணறிவை உருவாக்குவது” என்ற தலைப்பில் அவர் சிறப்பு உரையாற்றினார். ஏஐ வழங்கவுள்ள வாய்ப்புகள் அளவற்றவை, ஆனால் அவை பொறுப்புடன் நிர்வகிக்கப்படாவிட்டால் நிதி அமைப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். வங்கி, காப்பீடு, முதலீடு மற்றும் கட்டண துறைகளில் ஏஐ முதலீடு 2027க்குள் அமெரிக்க டாலர் 100 பில்லியன் ஆகும் என மதிப்பிடப்படுகிறது. தற்போது 78 விழுக்காடு நிதி நிறுவனங்கள் குறைந்தது ஒரு துறையில் ஏஐ யை பயன்படுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு மோசடி கண்டறிதல், ஒழுங்கு பின்பற்றல், வர்த்தக துல்லியம் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.
கல்வி கடன் வழங்கல்
காஞ்சிபுரம், அக்.14- காஞ்சிபுரம் கீழம்பி தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்விக்கடன் முகாமில் மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி 171 மாணவர்களுக்கு ரூ.12.53 கோடி கல்விக் கடன்களை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருத்தம்
திங்களன்று(அக்.13)செய்தியாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி என்ற செய்தியில் பயிற்சியாளராக பிரபல ஏஐ வல்லுனர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை என்பதற்கு பதிலாக தவறுதலாக முத்துகிருஷ்ணன் என வந்துவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம். – ஆர்