மூடப்பட்ட பள்ளி கேளிக்கை விடுதியானது: புதுச்சேரி பாஜக கூட்டணி அரசின் அவலம்
புதுச்சேரி, அக்.8- புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கல்வி மற்றும் பண்பாட்டு மரபின் மீது விழுந்த பேரிடியாக அமைந்துள்ளது நூற்றாண்டுப் பாரம்பரியமிக்க 'சொசியத்தே புரோகிரஸ்த்' பள்ளி மூடப்பட்டு, தற்போது அது கேளிக்கை விடுதியாக (ரெஸ்டாரன்ட்) மாற்றப்பட்டுள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் புதுச்சேரி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் க. ராமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பா.ஜ.க. - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசின் கீழ், புதுச்சேரி அரசுப் பள்ளிகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. புதிய பாடத்திட்டச் சிக்கல்கள், ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதியின்மை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பல ஆண்டுகளாக நிதி அளிக்காதது போன்ற காரணங்களால், குறிப்பாக கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மாநில முதலமைச்சரே, கடந்த 20 ஆண்டுகளாகப் புதிய பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை என வருத்தம் தெரிவிக்கும் நிலையில், சுமார் 15க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை பாதுகாக்கத் தவறுவது ஏன்? பா.ஜ.க. பின்பற்றும் முதலாளித்துவ, அறிவியலுக்குப் புறம்பான கல்விக் கொள்கைகளே இந்த அவலத்திற்குக் காரணம். அரசுப் பள்ளிகள் மெல்ல மெல்ல மூடலை நோக்கிச் செல்கின்றன; இதற்குக் காரணமான ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும்! நூற்றாண்டுப் பள்ளிக்கு நேர்ந்த சோகம்! புதுச்சேரி நகரின் மையத்தில், நூற்றாண்டுகளாகச் செயல்பட்டு வந்த 'சொசியத்தே புரோகிரஸ்த்' பள்ளி மூடப்பட்டு, தற்போது ரெஸ்டாரண்டாக மாறியுள்ள நிகழ்வு, கல்வியின் மீது ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அக்கறையின்மையைப் பறைசாற்றுகிறது. 1880ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அறக்கட்டளையால், 1921ஆம் ஆண்டு முதல் உயரிய நோக்கத்துடன் இந்தப் பள்ளி இயங்கி வந்தது. காலனி ஆதிக்கக் காலத்திலேயே அறிவியல் சிந்தனையைத் தூண்டும் கல்வியை, நகரைச் சுற்றியுள்ள தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் இலவச மதிய உணவுடன் இங்கு பெற்றனர். 1986ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளியாகச் சிறப்பாகச் செயல்பட்ட இப்பள்ளி, சமீப காலமாக ஆட்சியாளர்களின் தவறான கல்விக் கொள்கைகள் மற்றும் காளான்கள் போல முளைத்த தனியார் கல்வி நிறுவனங்களால் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. அரசு உதவிகள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட நிலையில், மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், கடைசியாக 300க்கும் குறைவான மாணவர்களுடன் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டதோடு, பள்ளி உரிமையாளருக்குரிய வாடகையும் செலுத்தப்படவில்லை. இதன் விளைவே, கல்வி நிலையம் இன்று கேளிக்கை மையமாக மாறியுள்ளது! பண்பாட்டு அடையாளம் அழிவதை சகித்துக் கொள்ள முடியாது! இந்தப் பள்ளி வெறும் கல்விக்கூடம் மட்டுமல்ல! மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் கலை, இலக்கியம், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் கலாச்சார மையமாகவும் இது திகழ்ந்து வந்துள்ளது. பல பத்தாண்டுகளாகப் பல்வேறு நிகழ்வுகளைக் கண்ட இந்த இடம், பிரெஞ்சு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கட்டிடக்கலையின் அடையாளமாகவும் விளங்குகிறது. இது போன்ற மையங்கள் புதுச்சேரிக்குச் சிறப்பு சேர்ப்பவை. இவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. ஆனால், கேளிக்கை மற்றும் உல்லாசம் என்ற பெயரில் மதுபானக் கடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த அவலப் பட்டியலில் இந்த நூற்றாண்டுப் பள்ளியும் இணைவதை புதுச்சேரி பொதுச் சமூகம் ஒருபோதும் ஏற்காது என்று சிபிஎம் திட்டவட்டமாகக் கருதுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச் செயலற்றுக் கிடக்கும் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனத்திற்கும் இதே கதி வந்து விடுமோ என்ற கவலையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதெரிவித்துக் கொள்கிறது. எனவே கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்ட இந்தப் பள்ளி வளாகத்தை, அதன் உயரிய நோக்கம் கெடாமல் புதுச்சேரி அரசு உடனடியாக மீட்க வேண்டும உரிமையாளருக்குரிய வாடகை மற்றும் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக அளித்து, நகரின் மையத்தில் உள்ள இந்த இடத்தை மீண்டும் ஒரு கல்வி மற்றும் கலைக் கலாச்சார மையமாகப் பராமரிக்க வேண்டும் என்று சிபிஎம் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.