வண்டு கடித்து குழந்தை மூச்சு திணறி பலி
திருவள்ளூர், ஆக.25- திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது33) திருமணமான இவருக்கு மனைவியும்,இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் ஊராட்சி, ஸ்ரீசக்தி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சனிக்கிழமையன்று இவரது இளைய மகள் குகஸ்ரீ (வயது1) வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்.அவருக்கு அவரது தாய் தண்ணீரில் தொட்டு முறுக்கை ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது கவனக்குறைவால் தண்ணீரில் இருந்த வண்டு ஒன்றுடன் முறுக்கை குழந்தைக்கு ஊட்டி விட்டதாக தெரிகிறது.இதனால் சிறிது நேரத்தில் குழந்தை மூச்சுத்திணறி அலறி துடித்து அழுதது.உடனடியாக அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். மேலும்,குழந்தை முருக்குடன் வண்டை விழுங்கியதால் மூச்சு குழாயில் அடைத்துக் கொண்டது.இதனால் குழந்தை மூச்சு திணறி இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெங்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.