சூளகிரி, கிருஷ்ணகிரியில் முதல்வர் இன்று 'ரோட்ஷோ'
கிருஷ்ணகிரி, செப்.10- ஓசூர், சூளகிரி மற்றும் கிருஷ்ணகிரியில் இன்று (செப்.11) நடைபெறும் 'ரோட்ஷோ' முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை (செப்.11) ஓசூர் வருகிறார். பேலகொண்டப் பள்ளிக்கு காலை 11மணிக்கு தனி விமானத்தில் வருகிறார். பின்னர், 11:35 முதல், 12:50 மணி வரை, ஓசூர் - தளி சாலையில் உள்ள ஆனந்த் கிரான்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். மதியம், 1:20 மணிக்கு, பாகலூர் சாலையில் எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் அமைய உள்ள அசன்ட் சர்க்யூட் நிறுவனத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். இதைத் தொடர்ந்து மதியம், 2 முதல், மாலை, 4 மணி வரை, ஓசூர், திமுக எம்.எல்.ஏ., பிரகாஷ் வீட்டில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு ஓய்வெடுக்கிறார். மாலை, 4:30 மணிக்கு சூளகிரி பேருந்து நிலையம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வரை 'ரோட்ஷோ' செல்கிறார். மாலை, 5 மணிக்கு, குருபரப்பள்ளி டெல்டா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை பணியை துவக்கி வைக்கிறார். பிறகு, மாலை 6 மணிக்கு கிருஷ்ணகிரி டோல்கேட்டில் இருந்து 'ரோட்ஷோ' நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை, அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், மதியழகன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். முதல்வர் வருகை நிகழ்ச்சி நிரல் கடைசி நேரத்தில் மாறுதலுக்கு வாய்ப்புள்ளதாக, அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.