ஒகேனக்கல்லில் குளிக்க, பரிசல் இயக்க 3 ஆவது நாளாக தடை
தருமபுரி, ஆக.20- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியாக இருப்பதால், அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 3 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டம், கேரளம் மாநிலத்திற்குட்பட்ட வயநாடு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும், மைசூரு மாவட்டத்தில் அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த 2 அணைகளும் நிரம்பி விட்டதால், அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு செவ்வாயன்று மாலை ஒரு லட்சத்து 45 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்தது. தொடர்ந்து, புதனன்று காலை நிலவரப்படி நீர்வரத்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக சற்று குறைந்துள்ளது. இருப்பினும், மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் செல்லாதவாறு வாயில் முன்பு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக - கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.