tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

புதுச்சேரி, காரைக்காலில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, அக். 2- புதுச்சேரி, காரைக்காலில் வெள்ளிக்கிழமை (அக்.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் ஆயுத பூஜையையொட்டி புதன்கிழமையும், காந்தி ஜெயந்தியையொட்டி வியாழக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள். இடையில் வெள்ளிக்கிழமை மட்டும் பணி நாளாக இருந்தது. இதையடுத்து நாளையும் (அக்.3) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை நாளாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட உத்தரவில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

சாலையோர வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) பெயர் பலகை திறப்பு

புதுச்சேரி, அக்.2- புதுச்சேரி கருவடிக்குப்பம் ஜிஞ்சர் ஹோட்டல் எதிரில் சிஐடியு பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் சிஐடியு மாநில தலைவர் பிரபுராஜ் கலந்துகொண்டு புதிய பெயர் பலகை திறந்து வைத்தார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் வடிவேல் முன்னதாக சங்க கொடியை ஏற்றி வைத்தார். சிஐடியு நிர்வாகிகள் அந்தோணி, அழகர்ராஜ், அன்பழகன், ராமசாமி, ஜீவானந்தம், விஜி, சண்டே மார்க்கெட் கிளைச் செயலாளர் சுரேஷ், கிளைச் செயலாளர் மணிமாறன், மாலிக் பாஷா, அண்ணாமலை, ஜெகன், அமல்ராஜ், சுரேகா லேட்டஸ்ட், திரளான சாலையோர வியாபாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

விக்கிரவாண்டி அருகே  கார் தீப்பிடித்து மூவர் பலி

சென்னை, அக்.2- விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்து எரிந்ததில் சென்னையைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை(அக்.2) காலை பலியாகினர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் முண்டிப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து மூணாறுக்கு சென்னையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் காரில் சுற்றுலா சென்றுகொண்டிருந்தனர். விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் காட்டன் மில் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுப்புற தடுப்பில் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கார் தீப்பிடித்து எரிந்ததில் சம்சுதீன், ரிஷி மற்றும் மோகன் ஆகிய மூவரும் பலியாகினர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அப்துல் அஜீல், தீபக் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொலை செய்து தப்பிய மூவர் விழுப்புரத்தில் கைது

விழுப்புரம், அக். 2- சென்னையில் பீகாரை சேர்ந்தவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்ற மூன்று பேரை விழுப்புரம் காவல்துறையினர் கைது செய்தனர். பீகாரை சேர்ந்தவர் நிர்லாகுமார் சென்னை மாதவரம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவரும் அங்கு பணிபுரிந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சங்கரம், பபித்ரா, தீனோத்.  இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சங்கரம் உள்ளிட்ட மூன்று பேர் நிர்லாகுமாரை கொலை செய்துவிட்டு தப்பித்துள்ளனர். இது குறித்து மாதவரம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து தேடிவந்தனர். இந்நிலையில், விழுப்புரம் வழியாக தப்பித்து செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நாமக்கல் பேருந்தில் ஏறிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். பிறகு, இதுகுறித்து மாதவரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னைக்கு அழைத்து சென்றனர்.

ஆற்றில் குளித்தபோது  முதலை கடித்ததில் வாலிபர் படுகாயம்

சிதம்பரம், அக். 2- சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்தபோது முதலை தாக்கியதில் படுகாயங்களுடன் வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார். மெய்யாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் மகன் ஜெயச்சந்திரன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த புதன்கிழமை மாலை நேரத்தில் மேல்தவர்தான்பட்டு கிராமத்தையொட்டி ஓடும் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.  அப்போது, முதலை அவரது வலது கால், கை பகுதியில் கடித்து இழுத்துள்ளது. முதலையிடம் கடுமையாக போராடி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்டு சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கை, கால் உள்ளிட்ட ஆறு இடங்களில் முதலை பல் பதித்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையறிந்த சிதம்பரம் வனத்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு, வாலிபரை சந்தித்து ஆறுதல் கூறி சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். கடலூர் மாவட்ட வன அலுவலர் குருசாமியின் உத்தரவின்படி முதலைக்கடியால் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு ரூபாய் இருபத்தைந்தாயிரம் வனத்துறை சார்பில் உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது.