உள்ளூர் விடுமுறை
மேல்மருவத்தூர் ,ஜூலை 19- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா வருகிற திங்களன்று (ஜூலை 28) நடைபெற உள்ளதை முன்னிட்டு செங்கல் பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படு கிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளினை ஈடுசெய்திட 9.8.2025 சனிக்கிழமை அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்டஆட்சியர் தெரிவித் துள்ளார்.
பிறந்து சில நாட்களே ஆன சிசு கோவில் கருவறையில் மீட்பு
கிருஷ்ணகிரி, ஜூலை 19- வேட்டியம்பட்டி அருகே பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை கோவில் கருவறையில் மீட்கப்பட்டது. ஊத்தங்கரை வட்டம், வேட்டியம்பட்டி அருகே திருவண்ணாமலை சாலை ஆலமரம் பேருந்து நிறுத்தம் பகுதி யில் கந்தல பெரியப்பன் கோவில் உள்ளது. இவ்வழியே தன் நிலத்துக்குச் சென்ற ராஜசேகர் கோவிலுக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்டுச் சென்று பார்த்துள்ளார். கருவறையில் பிறந்து ஒரு சில நாட்களே ஆன ஆண் சிசு அங்கு கிடத்தப்பட்டு அழுதுகொண்டிருந்துள்ளது. அழும் குழந்தையை மீட்டுத் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்து பசும்பால் கொடுத்துள்ள னர். அத்துடன் இது குறித்து காவல் துறைக்கும், மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கும் தகவல் கொடுக்கப் பட்டது. அங்கு வந்த அரசு அதிகாரிகள் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தை பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்பெண்ணையில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உத்தரவு
கிருஷ்ணகிரி, ஜூலை 19 - தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்பெண்ணை நதியைத் தொடர்ந்து மாசுபடுத்தி, ஆறு செல்லும் தூரம் நெடுகிலும் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்து வதாக நீர்வளத்துறை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளித்தது. அத்தோடு ஆற்றில் மாசு அளவை ஆய்வு செய்து அறிக்கையை தமிழக நீர்வளத்துறையினர் தெற்கு மண்டல பசுமை தீர்ப்பாய அமர்வில் சமர்ப்பித்தனர். பெங்களூரு பெல்லந்தூர், அகரா, வர்தூர் ஏரிகளிலிருந்து வெளியேற்றப்படும் மாசுபட்ட நீர், நுரை, துர்நாற்றத்துடன் கெலவரப்பள்ளி அணைக்கு வந்து நிரைகிறது. இதனால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் கருப்பு நிற நீரில் நுரையும் துர்நாற்றமும் வீசுகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்பையும் சுகாதாரக் கேடுகளையும் ஏற்படுத்துவதாக நீர்வளத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளரும் அறிக்கை யைத் தாக்கல் செய்துள்ளார். இவற்றை ஆய்வு செய்த தீர்ப்பாயம் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் கழிவுநீர் கலக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டு கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர் மாசுபட்டு கருப்பு நிறத்தில் துர்நாற்றத்து டன் வெள்ளை நுரையாக வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க கர்நாடக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 21இல் நடைபெற உள்ளது என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அமர்வு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 29ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க கர்நாடக, தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓசூர் சார்பதிகார் அலுவலகம் முன்பு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஜனநாயக இயக்கங்களும் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த தீர்ப்பு குறிப்பிடத்தக்கது.