மக்கள் குறைதீர்க்கும் நாளில் 360 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சி, செப்.2 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று தீர்வு காணும் வகையில் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியரகத்தில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 346 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 14 மனுக்களும் என மொத்தம் 360 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உடனடித் தீர்வுக்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார். இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.