tamilnadu

சென்னை உயர்நீதிமன்றத்தில் 3.68 லட்சம் வழக்குகள் தேக்கம்

சென்னை உயர்நீதிமன்றத்தில்  3.68 லட்சம் வழக்குகள் தேக்கம்

நிரப்பப்படாத 20 நீதிபதிகள் பணியிடங்கள்

சென்னை, செப். 16- சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார்  3 லட்சத்து 68 ஆயிரம் வழக்குகள் புதிதாக தேக்கம் அடைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.  இதில், 32 சதவிகித வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் மட்டுமே உள்ளதும் தெரியவந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்த ஐந்து பேர் 2025 ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றனர். நீதிபதி ஆர். ஹேமலதா மே முதலாம் தேதியும், நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், மே இரண்டாம் தேதி யும், நீதிபதி ஏ.ஏ. நக்கீரன் மே ஒன்ப தாம் தேதியும், நீதிபதி வி. பவானி சுப்ப ராயன் மே பதினாறாம் தேதியும், நீதிபதி வி.சிவஞானம் மே முப்பத்து ஒன்றாம் தேதியும் பணி ஓய்வு பெற்றனர். இதையடுத்து அனுமதிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 75-ல் இருந்து 60 ஆக  குறைந்தது. ஏற்கனவே அனு மதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட குறைவான நீதிபதிகள் அதிகமான வழக்குகளை விசாரித்து வரும் நிலையில் ஒரே மாதத்தில் ஐந்து நீதிபதிகள் ஓய்வு பெற்றது, வழக்கு விசாரணையை பாதித்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் 60 நீதிபதிகளுக்கு அதிக வழக்குகள் விசாரணைக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் மேலும் நான்கு நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். நீதிபதி ஆர். சுப்பிர மணியன் ஜூலை 24 ஆம் தேதியும், நீதிபதி டீக்கா ராமன் ஜூன் 8 ஆம் தேதி யும், நீதிபதி இளங்கோவன் கணேசன் ஜூன் 4 ஆம் தேதியும், நீதிபதி சதீஷ் குமார் சுகுமார குரூப் ஜூலை 17 ஆம் தேதியும் ஓய்வு பெற்றனர். இறுதியாக நீதிபதி எம். சுந்தர் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பணி யிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 55 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். சுமார் 20 நீதிபதி களுக்கான பணி இடங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ளன. கடந்த 2024-ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி இந்தியா முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் மொத்த எண்ணிக்கையான 1122 நீதி பதிகளின் பணியிடங்களில் 360 இடங்கள் காலியாக உள்ளன. அதிக பட்சமாக அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் 78 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேகாலயா மற்றும் திரி புரா உயர்நீதிமன்றங்களின் மொத்த  எண்ணிக்கையான 5 நீதிபதிகளின் பணியிடங்களில் முழுவதும் நிரப்பப் பட்டு உள்ளது என தெரிவிக்கப் படுகிறது.