வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி
விழுப்புரம், செப்.26- விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தர்மன் மகன் கார்த்திக் (29). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர், வாட்ஸ்-அப் எண்ணிலும், டெலிகிராம் ஐடியிலும் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த நபர், குறைந்த முதலீட்டில் கூடுதல் லாபம் பெறலாம் என்று கூறியுள்ளார். அதன்படி கார்த்திக், முதலில் ரூ.800-ஐ செலுத்தி ரூ.1,040 ஆகவும், ரூ.3 ஆயிரத்தை செலுத்தி ரூ.3,900 ஆகவும் திரும்பப்பெற்றார். இதனை உண்மையென நம்பிய கார்த்திக், தன்னுடைய வங்கி கணக்குகளில் இருந்து 11 தவணைகளாக மொத்தம் ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்து 662-ஐ அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். பணத்தைப்பெற்ற அந்த நபர், கார்த்திக்கிற்கு சேர வேண்டிய தொகையை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து வாலிபரிடம் ஆன்லைனில் பணம் மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறை
விழுப்புரம், செப்.26- விழுப்புரம் அருகே சாலையில் விபத்து ஏற்படுத்தி 5 பேர் உயிரிழப்புக்கு காரணமான மினி லாரி ஓட்டுநருக்கு விழுப்புரம் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா போலீஸ் லைன் 6-வது தெருவில் வசித்து வருபவர் சகாதேவன் (48). இவர் தனது உறவினர் ஒருவருடன் கடந்த 2016-இல், லாரியில் கரும்பு லோடு ஏற்றுவதற்காக விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அரசூர் கரும்பு கோட்ட அலுவலகம் அருகில் சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த மினி லாரி, முன்னால் சென்ற லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி லாரியில் சென்ற உளுந்தூர்பேட்டை வட்டம், செம்மனந்தல் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் (46), சுப்பிரமணியன் (48), கோவை உக்கடத்தை சேர்ந்த சக்திவேல் (32), பழையப்பட்டினத்தை சேர்ந்த சண்முகம் (34), கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் தத்தமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (36) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சகாதேவன் காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மினி லாரி ஓட்டுநரான கேரளா மாநிலம் தத்தமங்கலத்தை சேர்ந்த ஜெயன் (36) என்பவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் முதலாவது சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் வியாழக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வரலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட ஜெயனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது
விழுப்புரம், செப்.26- பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள சங்கிலிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சையது காதர் (25). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இந்த நிலையில், 45 வயதுடைய பெண்ணை கை, காலை கட்டி வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக சையது காதரை மேல்மலையனூர் காவல்துறையினர் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, அவர் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதை தடுக்க குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில், குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டார். இதையடுத்து, சையது காதரை மேல்மலையனூர் காவல்துறையினர் கைது செய்தற்கான உத்தரவு நகல், கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போராட்ட நிதி
கடலூர், செப்.26- போக்குவரத்து தொழிலாளர்களின் 40வது நாள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து ரூ.40 ஆயிரம் போராட்ட நிதியாக மூத்த தோழர் ச.சிவராமன் வழங்கினார். போக்குவரத்து தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறும் போது வெறும் கையோடு அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரி வித்தும், பண பலன்களை வழங்க வலி யுறுத்தியும், நிலுவைத் தொகை, ஊதிய ஒப்பந்த அரியஸ் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 40 நாட்களாக தமிழக முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் போக்குவரத்து தொழி லாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் போராடி வரு கின்றனர். கடலூரில் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் மூத்தத் தோழரும் கடலூர் மாநக ராட்சி தொழிலாளர் சங்கத்தின் ஸ்தாபக தலைவருமான ச.சிவராமன் ரூ.40 ஆயி ரத்தை ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஜி.பாஸ்கரிடம் போராட்ட நிதியாக வழங்கி னார்.இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், மாநகராட்சி தொழிலாளர் சங்க நிர்வாகிகள், போக்குவரத்து சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.