tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

தமிழகத்தில் அதிகமான  இதய சிகிச்சை கண்டுபிடிப்புகள் இதய சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டில் தகவல்

  சென்னை, செப். 30-  இந்தியாவிலேயே இதய சிகிச்சை தொடர்பான அதிகமான கண்டுபிடிப்புகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளதாக சென்னையில் நடந்த இதய சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பேசிய நிபுணர்கள், கடந்த 10 ஆண்டுகளில் அதி நவீன இதய சிகிச்சைகள் தமிழகத்தில் இருந்து உருவாகியுள்ளன என்று தெரிவித்தனர். தமிழக இதய சிகிச்சை நிபுணர்களின் தனித்துவமான அணுகுமுறையே இதற்குக் காரணம் என்று பாராட்டினர். இந்திய இருதய நோய் மருத்துவர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் செயலாளர் டாக்டர் பி. கேசவமூர்த்தி இந்த முயற்சிகளுக்காகப் பாராட்டப்பட்டார். நவீன இதய சிகிச்சை மருத்துவத்திற்குப் பங்களித்த நாட்டின் மிகச்சிறந்த இருதய நோய் நிபுணர்கள் மாநாட்டில் கவுரவிக்கப்பட்டனர். மருத்தவர்கள் பி. கேசவமூர்த்தி (தஞ்சாவூர்), சிவகுமார், ராஜாராம் அனந்தராமன்,  அரசி மாறன், கண்ணன், சி.சுந்தர், நாகேந்திர பூபதி (சென்னை), ஜார்ஜ் ஜோசப் (வேலூர்) உள்ளிட்ட 19 மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்திய இருதய நோய் மருத்துவர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் சஞ்சய் தியாகி, தமிழ்நாடு பிரிவு தலைவர் டாக்டர் முருகேசன், துணைத்தலைவர் டாக்டர் காதர் சாகிப் உள்ளிட்ட பலர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் கடன்களை  தள்ளுபடி செய்ய கோரிக்கை

திருவள்ளூர், செப்.30- வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திரு வள்ளூர் வட்ட மாநாடு ஞாயிறன்று (செப் 28), விளாப்பாக்கத்தில் நடைபெற்றது. இதற்கு வட்ட பொருளாளர் கே.முருகன் தலைமை தாங்கினார்.வி.சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.தமிழ்அரசு துவக்கி வைத்து பேசினார். வட்டச் செயலாளர் கே.விஜயகுமார் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். ஏ.ஜி.கண்ணன், டி.டில்லி, எஸ்.கலையரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தீர்மானங்கள் மெய்யூர் ஏரி மதகுகளை சீரமைக்க வேண்டும்,  விளாப்பாக்கத்தில் கூட்டுறவு சொசைட்டியை கட்ட வேண்டும், மெய்யூர், விளாப்பாக்கத்தில் நெல் களங்கள் அமைக்க வேண்டும்,  இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும்,பட்டா கொடுத்த இடங்களில் அளவீடு செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  நிர்வாகிகள் தேர்வு வட்டத் தலைவராக எஸ்.கலை யரசன், செயலாளராக கே.முருகன், பொருளாளராக கே.விஜயகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.