தருமபுரியில் நிரந்தர தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் அமைத்திடுக
சிஐடியு மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
தருமபுரி, செப்.13- தருமபுரியில் நிரந்தர தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும் என சிஐடியு மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தருமபுரி மாவட்ட 13 ஆவது மாநாடு செப்.12, 13 ஆகிய தேதிகளில் பாப்பாரப்பட்டியில் நடைபெற்றது. செப்.12 ஆம் தேதியன்று நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவர்கள் உரையாற்றினர். இதைத்தொடர்ந்து, சனியன்று தோழர் இ.பொன்முடி நினைவரங்கத்தில் (பிகேஎஸ் திருமண மண்டபம்) பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி. நாகராசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சி.அங்கம்மாள் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். இணைச்செயலாளர் சி.கவிதா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக்குழு செயலாளர் பி.கிருஷ்ணன் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார், மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, பொருளாளர் சி.கலாவதி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுனன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், தருமபுரி மாவட்டத்தில் சில பஞ்சாலைகளும், கிரானைட் தொழிற்சாலைகளும், 50க்கும் மேற்பட்ட கார்மென்ட்ஸ் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் தொழிற்சாலை சட்டங்களையும், தொழிலாளர் சட்டங்களையும், தொழிற்தகராறு சட்டங்களையும் அமல்படுத்துவதில்லை. இது சம்பந்தமாக புகார் அளிக்கவோ அல்லது வழக்குகள் தொடரவோ தருமபுரி மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் நிரந்தரமாக செயல்படவில்லை. இதனால் கிருஷ்ணகிரியில் செயல்படும் தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் நிரந்தரமாக தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களை தொழிலாளர்களாக அறிவித்து, ரூ.26 ஆயிரம் குறைந்தபட்ச மாத ஊதியமாக வழங்க வேண்டும். தருமபுரியில் இயங்கிவரும் இஎஸ்.ஐ டிஸ்பன்ஸரி, இஎஸ்ஐ அலுவலகத்தில் போதிய பணியாளர்கள் நியமிக்க வேண்டும். மேலும், பிஎப் அலுவலகத்தை உடனடியாக துவங்க வேண்டும். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதி எண்:153 இல் குறிப்பிட்டுள்ளபடி, தமிழ்நாட்டில் 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். எரிபொருட்களின் விலையை குறைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. மோட்டார் வாகன சட்டத்திருத்தம், மின்சார சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சிஐடியு தருமபுரி மாவட்டத் தலைவராக சி.கலாவதி, செயலாளராக சி.நாகராசன், பொருளாளராக எஸ்.சண்முகம், துணைத்தலைவர்களாக பி.ஜீவா, பி.ஆறுமுகம், சி.அங்கம்மாள், சி.முரளி, ஜி.நாகராஜன், சி.கவிதா, டி.லெனின் மகேந்திரன், சி.சண்முகம், இணைச்செயலாளர்களாக சி.ரகுபதி, ஏ.சேகர், வி.ஜெயராமன், எம்.லில்லிபுஷ்பம், என்.வரதராஜன், ஆர்.செல்வம், ஏ.முருகேசன், எஸ்.ராஜம்பாள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு நிறைவுரையாற்றினார். முடிவில், தர்மராஜன் நன்றி கூறினார்.
