tamilnadu

img

ஆனைகட்டி அருகே குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானை

கோவை, ஏப். 20-கோவை ஆனைகட்டி பகுதியில் உணவு தேடி வந்த ஒற்றை யானை அங்கிருந்த வீட்டை இடித்து சேதப்படுத்தியது.கோவை மாவட்டம், ஆனைகட்டி தூமனூர் மலை கிராமம் காட்டு சாலைபகுதியில் வசித்து வருபவர் பெருமாள் (58). இவரதுவீட்டின் அருகே வெள்ளியன்று இரவு ஒற்றை காட்டு யானை உணவு தேடி வந்துள்ளது. அப்போது, அவரது வீட்டு வாசலில் போடப்பட்டிருந்தசிமெண்ட் கூரை மற்றும் ஓடுகளை இடித்து தள்ளியது. இதனால் வீட்டின் கூரைமுற்றிலும் சேதம் அடைந்தது. அச்சமயத்தில் பெருமாள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் உறங்கி கொண்டு இருந்ததால் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பினர். இதற்கிடையே, யானை ஊருக்குள் புகுந்த தகவலறிந்து ஊர் மக்கள் அப்பகுதியில் திரண்டு வந்து அங்கிருந்து ஒற்றை யானையை அருகிலிருந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும், இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். இதன்பின் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சென்றனர். கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் உயிரினங்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் சமீபகாலமாக பல இடங்களிள் காட்டுத் தீ பிடித்து பல ஏக்கர் வனப்பகுதி சேதம் அடைந்துள்ளதால், உணவு மற்றும் தண்ணீருக்காக யானைகள் குடியிருப்புகளை நோக்கி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

;