உதகையில் இருந்து மஞ்சூர் -கெந்தை வழியாக கோவை செல்லும் சாலையில் அரசு பேருந்தை வழி மறித்த காட்டு யானை கூட்டத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கோவைக்கு செல்ல குந்தா,மஞ்சூர்,முள்ளி, கெந்தை வழியாக கோவை செல்ல மாற்று பாதை உள்ளது. இந்த பாதையில் அரசு பேருந்து உட்பட அனைத்து வாகனங்களும் தினந்தோறும் சென்று வருகிறது. வனத்தையொட்டி இந்த சாலை இருப்பதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மாலையில் மஞ்சூரில் இருந்து கோவைக்கு அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தபோது யானை கூட்டம் சாலையை மறித்து நின்றது. சாலையின் இருபுறமும் செல்ல வழி இல்லாததால் பேருந்தை பார்த்துக்கொண்டே மெதுவாக நடந்து சென்றது. யானையை பின் தொடர்ந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை மெதுவாக ஓட்டி சென்றார். சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றதும் இடது புறமாக தென்பட்ட வனப்பகுதி வழியாக காட்டுயானைகள் சென்றதால் ஓட்டுனர் பயணிகளுடன் அச்சமின்றி பேருந்தை கோவை நோக்கி இயக்கினார்.
அதனை தொடர்ந்து இந்த சாலையில் அதிகமாக வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மெதுவாகவும் கவனமாகவும் செல்ல வேண்டும். இரவு நேரத்தில் பயணத்தை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.