tamilnadu

img

எரிசக்தி துறைக்கு அறிவிக்கப்பட்ட மீட்பு நிதி யாருக்கு?

13.5.2020 அன்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்த மீட்பு நிதி உதவிகளில் ஒன்று மத்திய  எரிசக்தி துறைக்கு ரூ.90,000 கோடி. அறிவிப்பை பார்க்கும் போது ஒரு பெரும் தொகையை மத்திய நிதியிலிருந்து மீட்பு நிதியாக அரசு அறிவித்ததைப்போல் தோன்றும். ஆனால்  கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்ததைப் போன்றது அரசின் அறிவிப்பும்.

அரசு அறிவித்துள்ள ரூ.90,000 கோடி உதவி என்பது மாநில அரசின் உத்தரவாதத்துடன் மின் விசை நிதி நிறுவனமும் (power finance corporation) கிராமப்புற மின்மயமாக்கல் கழகமும் (Rural electrification corporation) மின் வினியோக நிறுவனத்திற்கு பல நிபந்தனைகளுடன் இத் தொகையை அளிக்கும். இந்த அறிவிப்பானது புதிய ஒன்றல்ல, ஏற்கனவே மின் விநியோக நிறுவனங்கள் தனக்கு வேண்டிய நிதியை ரூ.3 லட்சம் கோடி வரை எந்த நிபந்தனையும் இன்றி மேலும் பல சலுகைகளோடு மேற்படி நிறுவனங்களிடமிருந்து பெற்று வந்தனர். மத்திய  அரசுதான் தலையிட்டு மறுசீரமைப்பை மாநில அரசுகள், மின் வாரியங்கள் வேகமாக செய்யவில்லை; அதனால் மாநில மின் வாரியங்களுக்கு நிதி உதவி ஏதும் அளிக்க வேண்டாம் என கட்டளையிட்டது. இதைச் செய்தது மத்திய பாஜக அரசே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

PFC / REC ஆகிய  நிறுவனங்களிடமிருந்து மின் விநியோக நிறுவனம் பெறும்  ரூ.90,000 கோடி நிதியை ஏற்கனவே பாக்கி வைத்துள்ள (அதாவது 94,000 கோடி ரூபாய்) தனியார் மின் உற்பத்தியாளர்களான அதானி, அம்பானி, டாடா பிர்லா, ஜி.எம்.ஆர், இந்து பாரத் போன்ற தனியார் நிறுவனங்களுக்கும் மத்திய பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனம் புதுப்பிக்கத் தக்க மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டுமே தவிர, மாநில பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனங்கள் மின் வினியோக நிறுவனங்களுக்கு எந்தவித உதவியும் நிவாரணமும் கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. 

எனவே, மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பின் முழு பலனையும் அடையப் போவது அதானி, அம்பானி கும்பல்களே தவிர ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாதாரண மின்நுகர்வோர்களான குப்பனும் சுப்பனும் அல்ல. நிதி உதவி பெறும் மத்திய பொதுத் துறை மின் உற்பத்தி நிறுவனங்கள் சில  தள்ளுபடிகள் ரிபேட்டுகளை அறிவிக்கும்; அதாவது மின்வினியோக நிறுவனங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தத்தின்படி மின்சாரத்தை கொள்முதல் செய்யாமல் போனாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிலைக் கட்டணமாக (Fixed charges)செலுத்த வேண்டியதில்லை என்றும் இதன் மூலமாக மின் விநியோக நிறுவனங்களுக்கு கிடைக்கும் தொகையை தொழிற்சாலை மின் நிறுவனங்களுக்கு கட்டண சலுகையாக  அறிவிக்க வேண்டுமே தவிர ஊரடங்கால் நேரிடையாக பாதிக்கப்பட்ட சாதாரண மின் நுகர்வோர்களுக்கு அல்ல என்பதும் கவனிக்கத்தக்கது.
ஊரடங்கு அமலாக்கலால் மாநில மின்வாரிய நிறுவனங்களுக்கு 20% வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது. இதை ஈடு செய்ய அரசின் அறிவிப்பில் ஏதும் இல்லை என்பதுதான் உண்மை.

===எஸ்.எஸ்.சுப்பிரமணியன்===