விழுப்புரம், நவ.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் நவம்பர் புரட்சி தினம், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ் நாடு உதயமான நாள்ஆகிய முப்பெரும் விழா விழுப்புரத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில்,“ கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இந்த நூற்றாண்டு விழா சாதாரணமானது அல்ல. இதில் ஏராளமான ரத்த சுவடுகள், தியாகங்கள் இருக்கிறது” என்றார். நமது அடுத்த இலக்கை அடைய இதுவே தொடக்க பயணமாக இருக்கும். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாடு சிக்கலான நிலமையை சந்தித்து வருகிறது. அந்த கட்சிக்கும் ஆட்சிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புதான் தலைமை தாங்குகிறது. நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். மக்களை ஒற்றுமை படுத்தி நாட்டை மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்து செல்லவேண்டும். தமிழகத்திலும் அந்த போராட்டத்தை நடத்த வேண்டும். இந்த போராட்டத்தின் மூலம் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டியப் மிக பெரிய பொறுப்பு கம்யூனிஸ்டுகளுக்கு உள்ளது என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமூர்த்தி, பி.குமார், வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துக்குமரன், ஏ.சங்கரன், ஆர்.மூர்த்தி, ஜி.ராஜேந்திரன்,இடைக்குழு செயலாளர்கள் கே.குப்புசாமி, ஆர்.தண்டபாணி, வி.கிருஷ்ணராஜ்,டி.இராமதாஸ், எஸ்.நெடுஞ்சேரலாதன்,டி.முருகன்,கே.அம்பிகாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.