districts

img

சோசலிச பொருளாதரம்தான் மனித குலத்தை மேம்படுத்தும் சென்னை கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை, நவ. 8- சோசலிச பொருளாதரம்தான் மனித குலத்தை  மேம்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தெரிவித்தார். நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு கட்சியின் மத்திய சென்னை மாவட்டக் குழு  சார்பில் செஞ்சட்டை பேரணியும், பொதுக் கூட்டமும் சென்னை எழும்பூரில் திங்களன்று (நவ. 7) நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,கலந்து கொண்டு பேசுகையில் அவர் பேசுகையில், உலகில் பல  ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால்  சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற ஆட்சி  மாற்றம் என்பது மனித குலத்தை மேம்படுத்து வதற்கான ஆட்சி மாற்றம். உழைப்பாளி மக்கள்  ஒன்றிணைந்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நிரூபித்ததுதான் நவம்பர் புரட்சி தினம்.
சாதி இல்லை
1930ஆம் ஆண்டு தந்தை பெரியார் ரஷ்யாவிற்கு சென்றர். இங்கே பல சாதிகளைக் கண்ட அவர் அங்கு சாதியில்லை, சாதிக்கு ஒரு கோவில் இல்லை, சாதிக்கொரு சுடுகாடு இல்லை அனைவரும் சமம் என்பதைக் கண்டு  ஆச்சரியப்பட்டார். அதனால்தான் அவர் இந்தியாவிற்கு வந்த பின்பு சாதிய சனாதன சக்திக ளுக்கு எதிராக தோழர் ஜீவா, தோழர் சிங்கார வேலரோடு இணைந்து சமதர்ம சமுதாயம் அமைக்க பாடுபட்டார். இந்தியா போன்ற விடுதலையடைந்த 3ஆம்  உலக நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேற்ற மடைய எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் சோவியத் யூனியன் மகத்தான பங்களிப்பை செய்தது. தமிழகத்தில் இருக்கக் கூடிய என்.எல்.சி.யை உருவாக்கியது சோவியத் யூனியன்தான். அதேபோல் உருக்காலை, பல்வேறு மின்சார திட்டங்களை வழங்கியது சோவியத் யூனியன்தான் என்றார். ஏகாதிபத்திய நாடுகள் இதுபோன்ற உதவிகளை செய்தது உண்டா என அவர் கேள்வி எழுப்பினார்.
பின்னடைவு
சோவியத் பின்னடைவுக்கு பிறகு உலக முதலாளிகளும், ஏகாதியபத்திய நாடுகளும் கம்யூனிசம் பிறந்த இடத்திலேயே அதற்கு கல்லறை கட்டப்பட்டு விட்டது என்றெல்லாம் கொக்கரித்தார்கள். ஆனால் கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாட்டில் சோவியத் நாட்டில் ஏற்பட்டிருப்பது சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவே தவிர, அது மார்க்சியத்திற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல என்று ஆணித்தரமாக பிரகடனம் செய்யப்பட்டது. மார்க்சியம் என்பது சமூக விஞ்ஞானம், அது எப்போது தோற்காது. அதனால்தான் கியூபாவை தொடர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகள் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றி வருகிறார்கள். இடதுசாரிகளை நோக்கி மக்கள் வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
சோசலிச பொருளாதாரம்
சோசலிச பொருளாதரத்தால் மட்டும்தான் வேலையின்மையை போக்க முடியும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியும், ஊழலை ஒழிக்க முடியும், மனிதனுக்கு மனிதன் அடிமை என்ற நிலையை ஒழிக்க முடியும், சாதியற்ற, மதமற்ற சமதர்ம சமூகத்தை படைக்க முடியும், மனிதகுலத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்த முடியும். அப்படிப்பட்ட சோசலிச சமூகம் அமைய இந்நாளில் சபதமேற்போம் என்று பாலகிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார். திருவல்லிக்கேணி பகுதிச்செயலாளர் கவிதா கஜேந்திரன் நன்றி கூறினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, எஸ்.கே.முருகேஷ், கே.முருகன், ஆறுமுகம், இ.சர்வேசன், 98ஆவது வார்டு கவுன்சிலர், ஏ.பிரியதர்ஷினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.