tamilnadu

img

விழுப்புரம்: ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடி இருளர் பெண் தீக்குளிக்க முயற்சி!

விழுப்புரம், ஜன.3- இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கு இடைத்தரகர் பணம் கேட்டதால் மனமுடைந்த இருளர் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட ஜம்போதி ஊராட்சியை சேர்ந்த  கலர்ப்பாளையம் பழங்குடி இருளர் பகுதியில் வசித்து வருபவர் முருகன் மனைவி கன்னியம்மாள், இருளர் பழங்குடி பெண்ணான இவருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது, இந்நிலையில் இலவச வீட்டு மனை பட்டாவை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நேரடியாக கன்னியம்மாளிடம் வழங்காமல் இடைத்தரகர் இடம் வழங்கவுள்ளனர். இதனைத்தொடர்ந்து கன்னியம்மாளிடம் இலவச பட்டா வழங்குவதற்கு இடைத்தரகர் அந்த இடத்திற்கான அரசு மதிப்பீட்டு தொகையை வழங்கினால் மட்டுமே வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என கூறியுள்ளார். இதுதொடர்பாக செஞ்சி காவல் நிலையம், மாவட்ட காவல்துறை மற்றும் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும்  நடவடிக்கை எடுக்கப்படவில்லை
இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலை மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த கன்னியம்மாள் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயில் முன்பு கொண்டுவந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார், இதனை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் விரைந்து பெண்ணை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர், தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 
இலவச மனைப்பட்டா கிடைக்காமல் பழங்குடி இருளர் பெண் ஒருவர் மாவட்ட ஆட்சித் பெருந்திட்ட வளாகம் வாயில் முன்பு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.