விழுப்புரம் அருகே உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர்.
விழுப்புரம் அருகே குண்டலப்புலியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தில் 143 பேர் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளதும், இளம் பெண்களை போதைப் பொருட்கள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளதும், பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர் என்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பல்வேறு விதத்தில் சித்ரவதைக்கு உள்ளாக்கியதும் தெரியவந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் பெண் கள் பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். அங்கு இருந்தவர்களில் 16 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்பதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டவர்களை அடித்து துன்புறுத்தியது, மனநலம் பாதிக்கப் பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தது, வியாபார உள்நோக்கத்துடன் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்டது உள்ளிட்ட பல சமூக விரோதச் செயல்கள் இந்த ஆசிரமத்தில் நடை பெற்றுள்ளதாக ஆய்வு செய்வதற்காக சென்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில், ஆசிரமத்தை அரசு கையகப்படுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் ஆசிரமங்கள், காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக்குழு அமைக்க வேண்டும், அனுமதியின்றி அன்பு ஜோதி ஆசிரமம் செயல்பட அனுமதித்த சமூக நலத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிகைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தற்போது அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர்.