அடுத்த மாதம் தமிழ்நாட்டில் அதிக மழை பெய்ய வாய்ப்பு!
சென்னை, ஜூலை 28 - தமிழ்நாட்டில் அடுத்த மாதம் இயல்பைவிட மழை அதிகம் பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். தென்மேற்குப் பருவமழை, வெப்பச்சலன மழையால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 27 வரையிலான நிலவரப்படி 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 6 சதவிகிதம் குறைவாகும். இந்த மாதம் தமிழ்நாட்டில் பெரும்பாலான நாட்களில் வெப்பமான சூழ்நிலையே நிலவியதால் மழைப் பதிவு குறைந்துள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் முதல் 2 வாரங்கள் வெப்பச்சலன மழை தீவிரமாக இருக்கும். ஆகஸ்ட் 3 முதல் 15-ஆம் தேதி வரையிலான காலத்தில் வடகடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார். ஆகஸ்ட் 18 முதல் 31 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்ட பகுதிகள், கேரளம், கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும். ஒட்டுமொத்தத்தில் அடுத்த மாதம் இயல்பைவிட அதிக மழையும், இயல்பான வெப்பமும் தமிழ்நாட்டில் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி - தஞ்சாவூர் 4 வழிச்சாலை விரிவாக்கம்
சென்னை, ஜூலை 28 - தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடியில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது, 50 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலையாக விரி வாக்கம் செய்யப்பட்ட சேத்தியாத்தோப்பு - சோழவரம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இது விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு கட்டமாகும். பத்திரிகை தகவல் பணியகம் வெளியிட்ட விளக்கத்தின்படி, விக்கிரவாண்டி -தஞ்சாவூர் இடையே 164.28 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை-36ஐ 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் 3 கட்டமாக பிரிக்கப்பட்டன. 65.96 கி.மீ. தூரமுள்ள விக்கிரவாண்டி - சேத்தியாத் தோப்பு பகுதி முதல் கட்டம், 50.48 கி.மீ. தூரமுள்ள சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பகுதி 2-ஆம் கட்டம், 47.84 கி.மீ. தூரமுள்ள சோழபுரம் - தஞ்சாவூர் பகுதி 3-வது கட்டம் என பிரிக்கப்பட்டது. இதில், 3-ஆம் கட்டமான சோழபுரம் - தஞ்சாவூர் வரையி லான பணிகள் முடிந்த நிலையில், அதனை, பிரதமர் மோடி கடந்த 2025 ஏப்ரல் 6 அன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். சேத்தியாத்தோப்பு - சோழபுரம் வரையிலான 2ஆம் கட்ட சாலை விரிவாக்க பணிகள் முடிவுற்று, அதுவும் ஜூலை 26 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமான விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான பகுதியில் ஒப்பந்ததாரின் மோசமான திட்டமிடல் காரணமாக பணிகள் தடைபட்டு கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு இன்னும் 2 ஆண்டுகளில் நிறைவு செய்யப்படும்.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2 பொதுப் பெட்டிகள் இணைப்பு
சென்னை, ஜூலை 28 - சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. மும்பையில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் செப்டம்பர் 5-ஆம் தேதி முதலும், மறுமார்க்கமாக எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதலும், ஒரு 3-ஆவது வகுப்பு ஏ.சி. பெட்டி, ஒரு படுக்கை வசதி பெட்டிக்கு மாற்றாக 2-ஆவது வகுப்பு பொதுப்பெட்டி 2 இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் செப்டம்பர் 6ஆம் தேதி முதலும், மறுமார்க்கமாக சேலத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் செப்டம்பர் 7ஆம் தேதி முதலும் இதே மாற்றங்கள் செய்யப்படும். மகாராஷ்டிர மாநிலம் தாதரில் இருந்து புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் செப்டம்பர் 9-ஆம் தேதி முதலும், மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து புறப்பட்டு தாதர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் செப்டம்பர் 11-ஆம் தேதி முதலும் ஒரு படுக்கை வசதிப் பெட்டிக்கு மாற்றாக 2-வது வகுப்பு பொது பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்பட உள்ளது.
அதிமுக மாநிலங்களவை எம்.பி.க்கள் பதவியேற்பு!
புதுதில்லி, ஜூலை 28- மாநிலங்களவை உறுப் பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்ட னர். திமுக சார்பில் பி. வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை எம்.பி.க்களாக பதவியேற்ற நிலையில், திங்களன்று அதிமுகவைச் சேர்ந்த வர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை!
சென்னை, ஜூலை 28 - பழவேற்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடுக்கு அடுத்த ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஏவுதள மையம் அமைந்துள்ளது. இந்த மையத்திலிருந்து ஜூலை 30 அன்று ஜிஎஸ் எல்வி எப் 16 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதனால் பழவேற் காடு மீனவர்கள் கட லுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவ நலத்துறை தெரிவித்துள்ளது.
ரூ. 30 ஆயிரம் கோடி மதிப்பில் ஆப்பிள் நிறுவன தொழிற்சாலை
சென்னை, ஜூலை 28 - “ரூ. 30 ஆயிரம் கோடி யில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின் னணு உதிரிபாக தொழிற் சாலைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலை கள் மூலம் 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். மின்னணு உதி ரிபாகங்கள் உற்பத்திக்கான முக்கிய மையமாக தமிழ்நாடு உருவாகிறது” என தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.