20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆக. 6 முதல் 28 வரை தொடர் போராட்டம்!
அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 28 - அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து, ஆகஸ்ட் 6 துவங்கி, 28 வரை மூன்று கட்டங்களாக தொடர் போராட்டங்களை நடத்தப் போவ தாக தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் இராசிபுரம் திருவள்ளுவர் கல்லூரியில் மாநிலத் தலைவர் முனைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன் தலைமை யில் நடைபெற்றது. மண்டலச் செயலாளர் முனை வர் லோகநாதன் வரவேற்றார். முனைவர் துர்காதேவி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். பொதுச் செயலாளர் சோ. சுரேஷ் சிறப்புரை யாற்றினார். மாநிலப் பொருளாளர் முனைவர் பா. பிரகாஷ், மாநிலத் துணைத்தலைவர்கள், முனைவர் ஆ.கோபால கிருஷ்ணன், முனை வர் த. மதுரம், அய்பெக்டோ அகில இந்திய செயலாளர் முனைவர் ரவி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். முனைவர் ஐயன்துரை நன்றி கூறினார். இக்கூட்டத்தில், “பேராசிரியர் பணி மேம்பாடு, விரைந்து வழங்கப் பட வேண்டும், கல்லூரிக் கல்வி இயக்குநராக பணியில் மூத்த அரசு கல்லூரி ஆசிரியரை நிய மிக்க வேண்டும், அரசு கல்லூரி களில் மாற்றுப்பணியின் அடிப்படை யில் பணியாற்றும் அண்ணா மலை பல்கலைக் கழக மிகை ஆசிரியர்களை, அரசு கல்லூரி களில் பணி நிரந்தரம் செய்யக் கூடாது; சிபிஎஸ் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, பணி நீட்டிப்பில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 20 சதவிகித ஊதிய குறைப்பை உட னடியாக கைவிட வேண்டும், அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு உடனடி யாக பணி இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும், நான் முதல்வன் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைந்து சிறப்பாக நடைபெற சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை பெற வேண்டும், கல்லூரி ஆசிரியர்கள், முதல்வர்கள் நியமனங்களை விரைவுபடுத்த வேண்டும்” என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மேலும், இந்த 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆகஸ்ட் 6 அன்று கல்லூரி வாயில்கள் முன்பு கருப்பு அட்டை அணிந்து முழக்கப் போராட்டமும், ஆகஸ்ட் 13 அன்று 8 மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகங்கள் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டமும், ஆகஸ்ட் 28 அன்று கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகம் முற்றுகைப் போராட்டமும் நடத்து வது என்று முடிவு செய்யப்பட்டது.