லக்னோ:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் உட்பட 8 அர்ச்சகர்களின் மாதச் சம்பளத்தை உத்தரப்பிரதேச பாஜக அரசு உயர்த்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1992-ஆம் ஆண்டு கல்யாண் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றபோது, அங்கு 400 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பாபர் மசூதியை, சங்-பரிவாரங்கள் இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள்.ஆனால், அதற்கு முன்னதாகவே 1949-இல் பாபர் மசூதிவளாகத்தில் யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் குழந்தை ராமர் சிலையை நிறுவி, ராம் லல்லா என்ற பெயரில் தற்காலிக ராமர் கோயிலையும் சங்-பரிவாரங்கள் ஏற்படுத்தினார்கள். இந்த கோயிலில், அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு உத்தரப்பிரதேச அரசு ஊதியமும் வழங்கி வருகிறது.
இந்நிலையில்தான், ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச பாஜக அரசு, திடீர் ராமர்கோயிலின் பராமரிப்புச் செலவுக்கான மாதாந்திரத் தொகையை ரூ. 26 ஆயிரத்து 200-லிருந்து,ரூ. 30 ஆயிரமாகவும், தலைமை அர்ச்சகருக்கான ஊதியத்தை ரூ. 13 ஆயிரத்து 500 ஆகவும், ஏனைய அர்ச்சர்களுக்கு ரூ. 8ஆயிரம் மற்றும் ரூ. 10 ஆயிரத்து500 ஆகவும் உயர்த்தியுள்ளது.ஆதித்யநாத் அரசு அறிவித்த இந்த ஊதிய உயர்வால், அர்ச்சகர்கள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.