tamilnadu

img

சமூகத்தில் குற்றங்கள் சகஜம்; ராமரே வந்தாலும் தடுக்க முடியாது!

லக்னோ:
மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்த கடவுள் ராமரால் கூட உத்தரவாதம் அளிக்க முடியாது என்று உத்தரப்பிரதேச மாநில பாஜக அமைச்சர் ரன்வேந்திர பிரதாப் சிங் பேசியுள்ளார்.உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பது குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குத்தான் ரன்வேந்திர பிரதாப் சிங் இவ்வாறு கூறி யுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், 2 ஆண்களால் பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். எனினும், அந்த இளம்பெண் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து துணிந்து வெளியுலகிற்கு தெரிவித்து, நீதிக்காக போராடி வந்தார்.இதனால், ஆத்திரமடைந்த வல்லுறவுக் குற்றவாளிகள், பாதிக்கப்பட்ட இளம்பெண், வியாழனன்று வழக்கு விசாரணைக்காக, நீதிமன்றத்திற்கு புறப்பட்டபோது, அவரை வழிமறித்து, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொளுத்தினர். இதில் 90 சதவிகித தீக்காயங்களுடன் அந்த இளம்பெண் உயிருக்கு போராடி வருகிறார்.இதனைக் குறிப்பிட்டே செய்தியாளர்கள், அமைச்சர் ரன்வேந்திரா சிங்கிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது “சமூகம் என்று ஒன்று இருந்தால், அதில் 100 சதவிகிதம் குற்றங்களே இருக்காது என்று கூற முடியாது. மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்த கடவுள் ராமரால் கூட உத்தரவாதம் அளிக்க முடியாது” என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார்.