லக்னோ:
முசாபர் நகர் வன்முறையின்போது, பாஜகவினர் மீது போடப்பட்ட வழக்குகளை, அதிகார துஷ்பிரயோகம் மூலம் தள்ளுபடி செய்யும் நடவடிக்கையில் உத்தரப்பிரதேச பாஜக அரசு இறங்கியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தின் கலால் என்ற கிராமத்தில், இந்து பெண்ணை இஸ்லாமிய இளைஞர்கள் கேலி செய்து விட்டார்கள் என்று பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு, அதனடிப்படையில், மிகப் பெரிய வன்முறை வெறியாட்டத்தை, பாஜக தலைவர்கள் அரங்கேற்றினர்.
முசாபர் நகர் மாவட்டம் முழுவதும் 13 இஸ்லாமிய இளைஞர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். சுமார் 40 ஆயிரம் இஸ்லாமியர்கள், அவர்கள் வசித்துவந்த கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, அகதிகளாக மாற்றப்பட்டனர். 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி, பெரும்பான்மை இந்து மக்களின் வாக்குகளை பாஜகவுக்கு திருப்பும் யுத்தியாகவே இந்த வன்முறை நடத்தப்பட்டது. அதற்கேற்பவே, உத்தரப்பிரதேசத்தில் 70-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றது.
வன்முறை தொடர்பாக, எம்.பி., எம்எல்ஏக்கள் 16 பேர் உட்பட பாஜக-வைச்சேர்ந்த பலர் மீது, அன்றைய அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு மொத்தம் 72 வழக்குகளை பதிவு செய்திருந்தது. ஆனால், சங்கீத் சோன், மகேஷ்சர்மா, ஆதித்ய நாத் உட்பட யார் மீதெல்லாம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததோ, அவர்கள் எல்லோரும் 2014-இல்பாஜக ஆட்சிக்கு வந்ததும், மத்திய அமைச்சர்கள் ஆக்கப்பட்டனர். ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வராகவே தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில்தான், முசாபர் நகர் வன்முறை வெறியாட்டம் தொடர்பாக, பாஜக தலைவர்கள் மீதுள்ள 72 வழக்குகளையும் ரத்துசெய்ய முதல்வர் ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார். அதாவது, குற்றம் சாட்டப்பட்டவர்களே, தங்கள் மீது குற்றமில்லை என்று தங்களுக்குத் தாங்களே தீர்ப்பு வழங்கிக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.இதற்காக முசாபர் நகர் வழக்குகள் அனைத்தையும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ள ஆதித்யநாத், அந்த சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான மனுக்களை விரைவில் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.